திறம் மாறிய சொற்கள்

 



                திறம் மாறிய சொற்கள் 



புதியன, பழையன, வெகுஜன, அரியன— அனைத்துச் சொற்களையும் பயிலுதல் நமக்கு அவசியம்.  என்னை? பின்வரும் அடிகளைக் நோக்குங்கள்:

          "சொற்கள் நெரிகின்றன, பிளக்கின்றன, 

சில போது உடைகின்றன,

சுமை தாங்காது இறுக்கத்தில்,

அழுத்தத்தில் முடியாமல்,

வழுக்குகின்றன, சரிகின்றன, மடிகின்றன,

துல்லியம் கெட்டு மக்கிப் போகின்றன,

தம் இடத்திற் தங்கி நிற்பதில்லை,

அலைவின்றி அவை அமைவதில்லை … … …" (கட்டுரையாளனின் மொழிபெயர்ப்பு)

என்பது ஆங்கிலக்கவி டி.எஸ். எலியட் வாக்கு.


மொழி மட்டுமன்று, சொற்களும் மாறிக் கொண்டேதான் இருக்கும்.

"ஏனெனில், சென்ற ஆண்டின் சொற்கள் 

    முடிந்த ஆண்டின் மொழிக்குரியன;

    வரும் ஆண்டின் சொற்களோ                                                                                                                                               வேறோர் குரலுக்குக் காத்திருப்பன" (கட்டுரையாளனின் மொழிபெயர்ப்பு)

என்று எலியட் மேலும் கூறுகின்றார்.


கவிஞர் திருலோக சீதாராம் கூறியுள்ளார்: ‘சொற்களின் வரலாறு ஆச்சரியமானது.  அவை நம்மினும் மூத்தவை.  நமக்கு முன் இங்கு வாழ வந்துற்ற கோடானுகோடி மக்கள் அவற்றைப் பன்னெடுங் காலமாய் உச்சரித்திருக்கின்றார்கள்.  அவர்களுடைய ஆசாபாசங்கள், வெற்றிவீழ்ச்சிகள், இன்பதுன்பங்களெல்லாம் சொற்களைச் சுற்றிப் படர்ந்து அவற்றிற்கு அழுத்தமும் ஆழமும் கனமும் உயிர்ப்பும் ஊட்டியிருக்கின்றன.  ஆகவே சொல்லும் பொருளும் ஒன்றையொன்று கவிந்தும் ஒன்றிலொன்று கரந்தும் ஒன்றிலொன்று புதைந்தும் இரண்டறக் கிடைக்கின்றன.  சொற்களே எண்ணங்களின் சிறகுகள்.  பொருள் சொல்லை விளைக்கும்; சொல் பொருளை உமிழும்.

 ‘நமக்குண்டானது போலவே சொற்களுக்கும் அக, புற வாழ்வு உண்டு.  கணந்தோறும் நாம் குதப்புகின்ற சொற்களிலே அவற்றின் புறவாழ்வு மட்டுமே தோன்றும்.  ஆழ்ந்த எண்ணங்களைச் சுமந்து வரும் கவிதையிலே அவற்றின் அகவாழ்வு மிளிரும்.’

ஆங்கிலத்தில் “rival” என்னுஞ் சொல் “போட்டியாளர்” என்னும் பொருளில் இன்று வழங்குகின்றது. ஆனால் ஷேக்ஸ்பியர் காலத்தில் அதற்கு “உடன்பணியாளர் - colleague” என்றே பொருள். உடன்பணியாளர்கள் போட்டியாளர்களாவது சகஜமாகையால் சொல்லின் பொருள் காலப்போக்கில் திரிந்து இழிந்துவிட்டது போலும்!  இவ்வாறு பொருள் மாறிய சொற்கள் நூற்றுக்கணக்கில் ஆங்கிலத்தில் உண்டு.

தமிழிலும் இவ்வாறு பொருள் மாறிய சொற்கள் பல. அவற்றுள் சிலவற்றை இங்கே காண்போம்.

“அரசியல்” என்பது தொடக்கத்தில் “தேசபரிபாலன நெறி - art of governance” என்கின்றது சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப்பேரகராதி. “அரசநீதி” என்கின்றார் பரிமேலழகர். அதாவது, ஆட்சி செய்யும் முறை. இந்நாளில் அச்சொல் கட்சிகள், தேர்தல்கள் ஆகியற்றைப் பொறுத்ததாக மாறி பெரும்பாலும் ஓர் இழிசொல்லாகவே ஆகிவிட்டது. ஒரு பிரச்சினையைக் குறுகிய கண்ணோட்டத்துடன் அணுகுபவரை “அரசியல் செய்யாதீர்கள்!” என்று மற்ற அரசியல்வாதிகள் கண்டிக்கின்றனர்! 

இதே போன்று இன்னும் சில திறம் மாறிய சொற்களைக் காண்போம். “திறம்” என்னும் சொல் பல்பொருளுடைத்து. அவற்றுளொன்று “Quality, state, nature; இயல்பு” என்பது. சொல்லின் தலையாய இயல்பு அதன் பொருள்தானே! அதுவே மாறிப்போனால்?

இவ்விஷயத்தில் அனைவருக்கும் பழக்கமான சொல் “நாற்றம்”. இன்று “தீய வாசனை” என்றே வழங்கப்படும் இச்சொல் முன்பு “odor வாசனை” என்னும் பொருளையே கொண்டிருந்தது. அதுவும் அநேகமாக நல்ல வாசனை. ஒரு பொருள் மிகச்சிறப்புப் பெறுவதைப் “பொன்மலர் நாற்றமுடைத்து” என்று பண்டைய புலவர்கள் கூறுவர். இதன் பொருள் “தங்கத்தாலான பூ நல்ல வாசனையையும் பெற்றுவிட்டது!” என்பதாகும். “கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ?” என்று கேட்கின்றாள் ஆண்டாள். வாசனையாக இருந்த சொல் இன்று துர்நாற்றம் பிடித்ததாக ஆகிவிட்டது! 

கொங்கு செவ்வி தேம் தேன் நறவம் நறவு நறா நறுமை மணம் (மூன்றாவது பொருள்!) மரு மன்றம் மன்றல் மன்று வம்பு வாடை விரை வெறி வேரி 


இவ்வாறே, “சர்ச்சை” என்னும் சொல் இன்று “controversy வாத எதிர்வாதம், சொற்போராட்டம், கடும் கருத்துவேறுபாடு” என்னும் பொருளிலேயே வழங்கப்படுகின்றது. ‘அவர் பேசியது சர்சைக்குரியதாகிவிட்டது’ என்றால் அது பற்றி மிகுந்த கருத்துக்கொந்தளிப்பு ஏற்பட்டுவிட்டது என்று புரிந்துகொள்கின்றோம். ஆனால் “சர்ச்சை” என்பது சமஸ்கிருதத்திலிருந்து நமக்கு வந்த சொல். அதன் அடிப்படைப் பொருள் “ஆராய்ச்சி; discussion பேச்சுவார்த்தை” என்பதாகும். ஆராய்ச்சியும் அதைவிடப் பேச்சுவார்த்தையும் கருத்துவேறுபாட்டில் கொண்டுபோய் விடுவது வழக்கம் என்பதால் சர்ச்சையின் பொருள் கெட்டு வாய்ச்சண்டை என்றாகிவிட்டது! ஆனால் நம் பாரதப் பிரதமர் chai par charcha (டீயுடன் சர்ச்சை) என்னும் போது ‘டீ குடித்தவாறே கலந்து பேசுவது’ என்றே குறிக்கின்றார். அவர் பேசும் சர்ச்சை பல சர்ச்சைகளைத் தீர்க்குமென்று நம்புவோம்!


“அபராதம்”  என்னும் சொல்லுக்குப் பேரகராதி 1. Offence, transgression, fault, crime, sin; குற்றம். என்றும்  2. Fine, penalty; தண்டம்.” என்றும் இருபொருள் தருகின்றது. இச்சொல் “அபராத” என்னும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். சமஸ்கிருதத்தில் இதன் பொருள் பேரகராதி கூறும் முதற்பொருள் மட்டுமே. “சிக்ஷை” என்றால் “கற்பித்தல்” என்பதோடு “தண்டனை” என்றும் சமஸ்கிருதத்திற் பொருளுண்டு. தவறுசெய்வோர்க்குப் பாடம் கற்பிப்பதால் தண்டனைக்கும் “சிக்ஷை” என்னும் சொல் பொருந்தியது போலும்! தமிழில் இது “சிட்சை” என வரும். தண்டனை என்பதை முன்பு “அபராதசிட்சை” என்பார்கள். அதாவது “தவறுக்குப் பாடம்”. குறைமுயற்சி விதியின்படி அது படிப்படியாகச் சுருங்கி “சிட்சை” விடுபட்டுப் போய் “அபராதம்” என்று நின்றுவிட்டது. விளைவு? “அபராதம்” என்பது “குற்றத்துக்கு விதிக்கப்படும் தண்டனை, அதுவும் பணமாக” என்றாகிவிட்டது. சிறைத்தண்டனை முதலியவற்றினுக்கு இச்சொல் பயன்படுத்தப்படுவதில்லை. 


“புயல்” என்னும் சொல்லுக்குப் பேரகராதி “1. மேகம்” “2. மழை பெய்கை” என்றும் “3. கடுங் காற்று” என்றும் மூன்று பொருள் தருகின்றது. “புயல்வண்ணன்” என்று ஆழ்வாராதிகள் கண்ணனைப் போற்றுவது முதற்பொருளில்தான். ஆனால் இன்று “புயல் வருகின்றது” என்பது போன்று அது “கடுமையான மழை” என்று பொருள் மாறிவிட்டது. “புயல்மழை, புயல்காற்று, புயல்வீசுகிறது” என்றெல்லாம் இன்று சாதாரணமாக வழங்குகின்றோம்.


“பொன்” என்றால் “தங்கம்” என்றே இன்று எவரும் கூறுவார். ஆயின் பேரகராதி இதற்கு வழங்கும் 17 பொருள்களில் “உலோகம் - செம்பொன், வெண்பொன், கரும்பொன்; இரும்பு” என்பனவும் உண்டு. இன்று பிறபொருள்கள் எல்லாம் கழிந்து போய்த் “தங்கம்” மட்டுமே எஞ்சியுள்ளது!


“நன்றி” என்பது தமிழில் இன்றியமையாத சொல்லாகும். இன்று அது “ஒருவர் செய்த உதவிக்குத் தகுந்த கட்டுப்பாட்டு உணர்ச்சி” (அதாங்க, thanks!) என்னும் பொருளிலேயே வழங்குகின்றது. ஆனால் இச்சொல்லின் முதற்பொருள், தலைப்பொருள், பண்டைப்பொருள் “நன்மை; உதவி” என்பதாகும்! அதாவது, ஒருவருக்குச் செய்யும் உதவிதான் நன்றி; அதற்கு உண்டாகும் நல்லுணர்ச்சி அன்று! 

‘தந்தை மகற்(கு) ஆற்றும் நன்றி’ என்று வள்ளுவப் பெருந்தகை கூறும்போது அவர் உதவியைத்தான் குறிக்கின்றார். அந்த உதவியை மனத்தில் நினைவுவைத்திருத்தல் “நன்றியறிதல், நன்றியுணர்தல், நன்றியறிவுடைமை” எனப்பட்டது. குறுமுயற்சி விதியின்படி அந்த நீண்ட சொற்கள் “நன்றி” என்று சுருங்கி அது “gratitude” என்னும் பொருளுக்கு நிற்கின்றது. இதற்குத் தனித்தமிழில் வேறு சொல்லும் இல்லை! “பற்றம்” என்னும் சொல்லுக்கு ஆறாவது பொருளாக மட்டுமே “நன்றியறிதல்” வருகின்றது! ஆங்கிலத்தில் இதற்குப் பத்துக்கு மேற்பட்ட சொற்கள் உள. தமிழில் நன்றி குறைவாகத்தான் உள்ளது. தமிழர்களிடம் நிறைய இருந்தால் போதுமே! 


“வருத்தம்” என்பதற்குப் தரும் முக்கிய பொருள்கள் 1. Suffering, pain; துன்பம். 2. Strain, difficulty; கஷ்டம். 3. Effort; முயற்சி. 4. Exhaustion, weariness; களைப்பு என்பனவாகும். ஆனால் இன்று அச்சொல்லுக்கு நாம் வழங்கும் பொருள் “Sadness, distress சோகம், துயரம்” என்னும் பொருளிலேயே வழங்குகின்றோம். பழைய பொருள்களால் உண்டாகும் உணர்ச்சியே இப்போது அச்சொல்லுக்குப் பொருளாகிவிட்டது!


பொதுவழக்கிலும் இம்முறைமையை நாம் காணலாம். “சம்சாரம்” என்னும் சமஸ்கிருதச்சொல் “பிறப்பு இறப்புச் சுழற்சியாலான இவ்வுலக வாழ்க்கை” என்னும் பொருளுடைத்து. அதிலிருந்து “குடும்ப வாழ்க்கை” என்னும் பொருள் வளர்ந்து “குடும்பம்” என்றும் பொருள் மாறியது. இப்போது அச்சொல் “மனைவி” என்னும் பொருளில் வெகுஜன வழக்கில் உள்ளது. இவ்வாறு இச்சொல்லைப் பயன்படுத்துவோர் பெரும்பாலும் பிராமணர் அல்லாதோரே என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம்!


‘பாயசம் அருமையாக இருக்கிறது!’ என்று பாராட்டுகின்றோம். இச்சொல்லின் பழம்பொருள் “1. Rareness; அபூர்வம். 2. Greatness, pre-eminence; பெருமை. 3. Difficulty; பிரயாசம். 4. Difficulty of attainment; எளிதிற் பெறக்கூடா மை. 5. Smallness, minuteness; சிறுமை. 6. Nothingness, non-existence; இன்மை” என்பனவாகும். இன்றோ இச்சொல் “சிறப்பு” என்னும் ஒரு பொருளில் மட்டுமே வழங்கப்படுகின்றது. மற்ற பொருள்கள் மறைந்துவிட்டன!


இவ்வாறு, சொற்களின் பொருள் காலப்போக்கில் மேன்மை, இழிவு, குறுக்கம், பெருக்கம் என்னும் பல்வேறு விதங்களிலும் மாற்றமுறுவதை நாம் காணலாம்.


இங்கே நன்னூல் ஆசிரியர் பவணந்தி அடிகள் கூறியது நினைவுகூரத் தக்கது:


‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’


Comments

Popular posts from this blog

A Piece From Shakespeare's Macbeth. ஸேக்ஷ்பியரின் ம-க்பெத் நாடகத்திலிருந்து ஒரு கீற்று.

Comparitive Literature: Kannadasan, Kamban and Shakespeare