Shakespeare's Macbeth - Tamil Translation. by T.R. Suresh

 ம-க்பெத் 


வில்லியம் ஷேக்ஸ்பியர் 


முன்னுரை 


மொழிபெயர்ப்பு நடை 

“பல நூறு அல்லது ஆயிரமாண்டுகள் பழமையான ஒரு நூலின் மொழிபெயர்ப்பில் மூலநூல் மொழியின் தொன்மையும் கனமும் இருக்கவேண்டும். அப்போதுதான் அதன் தனிச்சிறப்பான மணம் மாறாது பெறுமொழிக்கு மாறும்.” இது என் தந்தையார் சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் TNR (தி.ந. இராமச்சந்திரன்) உறுதியாகக் கடைப்பிடித்த மொழிபெயர்ப்புக் கொள்கையாகும்.


இக்கோட்பாடு ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மொழிபெயர்க்கும் போது மிகவும் பொருந்தி அமையும். ஏனெனில், ஷேக்ஸ்பியரின் நாடகங்களின் கதைத்திட்டங்கள் பெரும்பாலும் பழைய கதைகள் அல்லது வரலாறுகளிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். அவற்றை உரைநடையில் படித்துப் பார்த்தோமானால் அவருடைய பெரும்புகழுக்குப் பொருத்தமாகத் தனிச்சிறப்பு ஏதும் அவற்றில் காணப்படுவதில்லை. ஆயின் ஏன் அவரை பல நூற்றாண்டுகள் கடந்தும் கொண்டாடுகின்றோம்? அன்றாடம் உலகில் எங்காவது ஒரு மூலையில் அவர் நாடகம் ஏதேனும் தவறாது நடிக்கப்படுகின்றது என்னும் அதிசயத்துக்குக் காரணம் என்ன? 


இதற்கு விடை அவருடைய ஈடுஇணையற்ற சொல்வளத்திலும் மொழிநடையிலும் கருத்துச்சிறப்பிலும் காணக்கிடக்கின்றது. கருத்துக்களை அதிக இழப்பின்றியே எப்படி வேண்டுமானாலும் மொழிபெயர்த்துக்கொள்ளலாம். ஆனால் சொல்வளம்? மொழிநடை? இவற்றை மொழிபெயர்க்கும்போது தற்கால நடையைக் கைக்கொண்டால் மூலத்தின் மணம் மாறிப்போகும். கம்பராமாயணத்தையோ புறநானூற்றையோ இன்றைய தமிழில் எழுதினால் மூலத்தின் பெருமை என்ன மிஞ்சும்? சுஜாதாவின் முயற்சியைப் படித்தவர்கள் நான் சொல்வதன் மெய்ம்மையை நன்குணர்வார்கள்.


எனவே நான் இம்மொழிபெயர்ப்பில் மேற்கொண்டுள்ள நடையும் சொற்பயன்பாடும் பழைய தன்மையன என்றுள்ளன. கடினச்சொற்கள் நிறைய உண்டு. அவற்றுக்குப் பொருளையும் ஆங்காங்கே ஆங்கிலத்திலும் தமிழுலும் வைத்துள்ளேன். இதைப் படிப்பவர்கள் தமிழின் சொல்வளத்தைக் கண்டு வியப்பது உறுதி. இதை நான் பெருமைக்குச் சொல்லவில்லை. பெரும்பாலான அத்தகைய சொற்களை நான் இப்போதுதான் கண்டேன், கற்றேன், “யாமறிந்த” என்னும் சொற்றொடரின் ஆழத்தை ஓரளவு உணர்ந்தேன். 


மூலத்தில் அடிகள் மேனாட்டு யாப்பமைப்புடன் உள்ளன. உரைநடையும் உண்டு. மொழிபெயர்ப்பில் நான் முழுதும் செய்யுள்நடையையே கைக்கொண்டுள்ளேன். எதுகை மோனை அபூர்வமாக அமைந்துள்ளன. சந்தம் உண்டு. அடிகள் பெரும்பாலும் 14 முதல் 16 அசைகளால் ஆனவை. சில போது 12, 17, அரிதாகப் 18 என்றும் உண்டு. சில இடங்களில் குறிய அடிகள் உள்ளன. வாய்விட்டுப் படித்தால் சந்த அமைவு புலனாகும். அருஞ்சொற்பொருள் கண்ட பின் மீண்டும் வாசிப்பது நன்கு இருக்கும். 




தலைநிலைப் பாத்திரங்கள் 


ம-க்பெத் பேரவாவின் துன்பக்கதை என்று கூறப்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களில் ம-க்பெத் அமைப்புச்சிக்கல் மிகக் குறைவானது. உண்மையில், கருதுபொருள், செயல்நோக்கம், கையாளும்முறை ஆகியவற்றில் இந்நாடகம் மீக்கெளிமை என்னும் சிறப்புப்பண்பைப் பெற்றுள்ளது. இதன் கதை நிகழ் காலத்தின் எளிய, கபடமற்ற தன்மையை இது ஒத்தமைகின்றது. இருப்பினும்கூட, பெரும் கலைப்படைப்பொன்றின் பொருள் முழுவதையும், அது நமக்குக் கற்பிப்பது அனைத்தையும் சில சொற்களில் தனி மணியாக அடக்குவது மிக அரிது, இயலாதென்றே கூறலாம் என்னும் கோட்பாட்டுக்கு இதுவும் விதிவிலக்கன்று. இருப்பினும் “பேரவாவின் துன்பக்கதை” இந்நாடகத்தின் மெய்யான, போதுமான வர்ணிப்பு என்றே தோன்றுகின்றது. கதையின் இயக்கத்துக்கு மூலவிசை பேரவாதான் என்பது வரைக்குமாவது இது பொருத்தமானதுதான். 


நாடகத்தின் மையச் செயல்பாட்டையும் அதன் பயங்கரமான விளைவுகள் என்னும் சங்கிலித்தொடரையும் இயக்கிவைப்பது பேரவாவே. ம-க்பெத்தைப் பொறுத்தமட்டில் அது சுயநலமான பேரவா; தன் உடைமையல்லாததை உரிமையாக்கிக்கொள்ள விரும்பும் வரையற்ற பேரவா; தனக்குத்தானே குற்றஒப்புதல் செய்துகொண்டு தானே தன்னைப் பழியிலிருந்து விடுவித்தல் என்னும் வெளிவேஷத்தை விலக்கிநிற்கும் மனப்பூர்வமான தன்னல நாட்டம்.


ம-க்பெத் சீமாட்டியிலோ அது சுயநலமற்ற பேரவா. அது காதலினாலும் தவறான பாதையில் செலுத்தப்பட்ட தியாகத்தாலும் பிறந்தது என்பதால் இன்னும் வலிமைமிக்க, பேராபத்தான தூண்டுவிசையாகும்.


இருவரிலுமே, இவ் உணர்ச்சியின் தோற்றக்காரணம் எவ்வளவு வேறுபட்டிருந்தாலும், அது இயங்கும்விதம் ஒன்றாகவேயுள்ளது: அதாவது, இன்னும் நல்ல விஷயங்களுக்கு இயலாத ஒரு தன்மை சீர்கெட்டழிவது. ஏனெனில், இவரில் எவரும் சைத்தான் இல்லை. இல்லாவிட்டால் அவர்கள் துன்பியல் வடிவங்கள் என்றே ஆகமாட்டார்கள். அவர்களின் வீழ்ச்சி அது பற்றிய பரிதாப உணர்ச்சியால் நம்மைத் தீண்டாது. நீண்டு இழுக்கப்பட்ட சித்திரவதை, இழிவார்ந்த சாவு ஆகியவற்றின் பேரச்சம் நிறைந்த அவர்களின் தலைவிதி நம்முள் எந்த அனுதாபத்தையும் எழுப்பாது.


ம-க்பெத்


ம-க்பெத்தின் குணவமைப்பின் நல்ல பக்கம் இன்னும் முனைப்பாக முன்னிறுத்தப்படுகின்றது. இரண்டாவது காட்சி அவனை விறல்சிறந்த தனிச்சிறப்பான போராளியாக, வீரத்திருமகளின் மணமகனாகக் காட்டுகின்றது. ங்கனின் பார்வையில் அவன் “ஈடிணையற்ற உறவினன்”. அவனை நன்றாக அறிந்திருக்கக்கூடியவர்கள் இவ்வாறு ஒருவனை வர்ணிக்கின்றனர் என்றால் அவனிடம் நல்லதற்கான திறன் மிகுந்திருக்கவேண்டும். ஆனால் இச் சாத்தியங்கள் மட்டுமீறிய பேரவாவினாலும் குறிப்பிடத்தக்க அளவு மனத்திட்பத்தின் பலவீனத்தாலும் ஒன்றுமில்லாமல் ஆக்கப்படுகின்றன. 


அவனுடைய பேரவாவுடன் அதே அளவு மிகைக்கற்பனையும் இணைந்துகொண்டுள்ளது.  நலனார்ந்த பக்கமாக நோக்கும்போது, இவ்விரண்டு குணங்களும்━ பேரவாவும் மிகைக்கற்பனையும்━ அவனுடைய பண்பமைவின் முன்னிற்கும் பண்புக்கூறுகளாகும். நாடகத்தின் முற்பகுதியில் ஒன்றும் பிற்பகுதியில் மற்றொன்றும் விஞ்சிநிற்கின்றன. ஏனெனில், அவன் ஆசைகளுக்கு முடுசூட்டுவதான குற்றத்தைச் செய்யுமாறு அவனை ஏவிவிடுகின்றது ஒன்று. அதற்கு மேல் அப்பேரவாவுக்கு வாய்ப்பெல்லை எதையும் அக்குற்றம் விட்டுவைக்கவில்லை. ஊழ்வினை அவனுடைய குற்றத்துக்கு வஞ்சந்தீர்க்குப் பயன்கொள்ளும் தலைமைக்கருவியாக மற்றொன்று விளங்குகின்றது. 


எதிர்மறையான பக்கமாக நோக்கும்போது அவனுடைய பண்பமைவில் இரு குணங்கள் காணப்படுகின்றன. ஒன்று அவனுடைய உடல்சார்ந்த வீரத்துக்கு நேரெதிரளவிலான அறமுறை உறுதி. மற்றொன்று மற்றொன்று இடையிடையே மட்டுமே வந்து போகும் உறுத்தல்களும் தயக்கங்களும் கொண்டமைந்த அவனுடைய மனச்சாட்சி. அவனுடைய திட்டங்களுக்கு அது இடையூறு செய்கின்றது. மூன்றாம் ரிச்சர்ட் மன்னனுக்கிருந்தது போன்ற திட்டமிட்டுச் செயல்படும், கழிவிரக்கமற்ற கயமைத்தனத்தினால் கிட்டும் திருப்தியும் அவனுடைய வெற்றிகளால் கிடைக்காதவாறும் அம்மனச்சாட்சி செய்கின்றது. 


தீமையின் வெற்றிக்கு உதவவே அமைக்கப்பட்டன போன்ற சூழ்நிலைகளின் இடையே வாழ்க்கையின் முரண்நகைப்பண்பு ம-க்பெத்தை வைக்கின்றது. சூனியக்காரிகளை முதன்முறை சந்திக்கும் முன்னரே அவன் அக்குற்றத்தைத் தன் மனத்துள் கருதியுள்ளான். அச்சந்திப்பின்போது மாபெரும் வெற்றியின் இறுமாப்பு நிறைந்துள்ளான். இவ்வாறாக, முன்னமே உள்ள அவனுடைய மன்னனாகும் கனவுகளாலும் உயர்தகைமை பற்றிய தற்போதைய உணர்வினாலும் உள்ளத்திலும் அறவுணர்ச்சியிலும் தீயதூண்டுதலுக்குக் குறிப்பாக மசியக்கூடிய நிலையில் அவன் உள்ளான். அத்தீயதூண்டுதலோ அவனை மிகவும் கவர்வதான ஒரு முறையில் வருகின்றது. மீமிகையாகக் கற்பனைவயப்படும் தன்மை இத்தகைய “இயற்கைகடந்த அழைப்புக்கு” எளிதில் இரையாகக்கூடியவனாக அவனை ஆக்குகின்றது. 


மறைமர்மமான, புறத்திலிருந்து வந்து அவனுனைய அடிஆழ்மன எண்ணங்களோடு மிக விந்தையாக ஒத்தமையும் இம் முதல்தொடர்பின் இத்தாக்கம் மிகவும் ஆழ்ந்ததாகவுள்ளது. மனத்துள் ஆழ்தலும் தன்னை மறந்து ஆழ்ந்து சித்தித்தலுமான மனநிலை ஒன்றில் தன்வயமற்று அவன் மூழ்கியிருக்கக் காண்கின்றோம் நாம். பலமுறையும் இத்தகைய மனநிலைகளில் அவ்வச்சமயத்து மெய்ந்நிலையின் தொடர்பை அவன் இழக்கின்றான். ஆயினும் கற்பனைசெய்வதன் தாக்கம் விரைவிலேயே எதிர்திசையில் இயங்கி மூடநம்பிக்கையின் வயப்படுகின்றது. அவன் கருதியுள்ள செயலின் விளைவுகளைத் திகைப்பூட்டும் உயிர்க்களையோடு சித்திரமாக அது தீட்டுகின்றது. 


இவ்வாறாக அவனுடைய “மனிதனென்னும் நிலை” முழுதுமே உணர்ச்சிகளின் மோதலால் ஆட்டங்காண்கின்றது. வேறுவழியின்றி, முற்றுஞ்செயலிழந்து முடிவறியா நிலையில் காலங்கடத்துவதையே அவன் பெரிதும் விரும்புவான். ஆயின் நிகழ்வுகள் அவனுக்கெதிராகவுள்ளன. மால்கம் அரசுரிமைக்குரியவன் என்று ங்கன் செய்யும் அறிவிப்பு ஏதோவொரு முடிவுக்கு வருமாறு அவனை நெருக்குகின்றது. ங்கனின் வருகை அப்பெரும் வாய்ப்பை வழங்குகின்றது.


 ம-க்பெத்தின் ஆழ்மனத்தில், ஆத்மாவில், போராட்டம் மீண்டும் தொடங்குகின்றது. இப்போது, தீய தாக்கத்துக்கான தன் பயங்கரமான ஆற்றல் ஊற்றுடன், அவன் மனைவி இடைநுழைகின்றாள். இருப்பினும், கற்பனைத்திறம் அவனை மீண்டும் எச்சரித்து, நல்லறிவு புகட்டி, மேற்செல்லாமல் பின்னிறுத்திவைக்கின்றது. அவ் எச்சரிக்கையில் மனச்சாட்சியும் முன்மதியும் தம் குரல்களையும் இணைத்துக்கொள்கின்றன. பேரவாவின் மீது மட்டுமன்றி அவன் மனைவியின் தாக்கத்தின் மீதும்கூட வெற்றி வந்துவிட்டதாகத் தோன்றுகின்றது. “அந்த விஷயத்தில்” அவன் “அதற்கு மேலும் செல்லமாட்டான்” என்று முடிவுசெய்து அவன் உயர்மலையின் விளிம்பில் நின்றுவிடுகின்றான். 


ஆனால் ம-க்பெத் சீமாட்டி அந்நோக்கத்திலிருந்து  திசைமாறுவதாக இல்லை. அந்நோக்கத்தை முதலில் முன்வைத்தவன் அவன். அது அவள் மனத்தைத் தன் வசப்படுத்தியது. இப்போதோ அவர்களிடையேயான காதலே அவனுக்கொரு சாபமாக ஆகின்றது. அவனுக்கு அனுகூலமாக அமையவேண்டியது அவனுடைய வீழ்ச்சிக்கான வாய்ப்பாக மாற்றம்பெறுகின்ன்றது. ஏனெனில், அவனுடைய பண்பமைவை━ அதன் பலவீனமான பக்கத்தை மட்டுமாவது━ அறிந்துகொண்டும் அவன் மீது தனக்கிருக்கும் ஆட்சியை அறிந்துகொண்டும் தன் அறிவையும் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்த அவள் தயங்கவேயில்லை. விரைந்து செயல்படும் ஓர் அறிவாற்றலும் கழிவிரக்கம் சிறிதுமற்ற ஓர் உறுதிப்பாடும் தீயதூண்டுதல், ஏவிவிடுதல் ஆகியவற்றின் செயல்நோக்கம் ஒவ்வொன்றையும் ஊக்குவிக்க அவள் சிறிதும் தயங்கவில்லை. சூனியக்காரிகளின் “இயற்கைகடந்த அழைப்பையும்” விஞ்சிய ஆற்றல்படைத்த அவளுடைய நெருக்குதலுக்கெதிராக அவனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இரும்பு நெஞ்சம் உறுதியற்ற உள்ளத்தை வெற்றிகொள்கின்றது; தீது பற்றிய தயக்கங்களையும் அச்சங்களையும் வாரி எறிகின்றது; எதிர்க்கமுடியாத வெள்ளப்பெருக்கில் அவனைத் தூக்கிச்செல்கின்றது. 


பேரவாவின் தூண்டுதலில் தொடங்கிய தீச்செயல் நிறைவேற்றப்படுகின்றது. இத்துன்பக்கதையின் நாடகச் செயல்தூண்டல் (dramatic motive) என்னும் முறையில் பேரவா தீர்ந்துபோகின்றது. அதற்கு மேல் மனக்கற்பிதமே (imagination) செயல்தூண்டலாக ஆட்சிசெய்கின்றது. ங்கன் கொலைசெய்யப்பட்ட கணத்திலிருந்து ம-க்பெத்தின் இறுதிமூச்சு வரை அவனுடைய கற்பிதம் அவனுக்கு ஓய்வளிப்பதேயில்லை. 


மெய்யாகவே, தொடக்கத்தில், கடும் நெருக்கடிச் சூழ்நிலையால் உடனடி நடவடிக்கை தேவைப்படும்போது, முற்றுமுழுதான தற்காப்புக்கான இயல்புணர்ச்சி (instinct) தன் ஆதிக்கத்தை உறுதியாகச் செயல்படுத்துகின்றது. ம-க்பெத் போர்வீரன் என்னும் முறையில் தன் செயல்பாட்டுத்திறனைப் புலப்படுத்தித் தன் பங்கை நன்றாகவே நிறைவேற்றுகின்றான். கணநேர மன உந்துதலால் அரசனின் பணியாளர்களைக் கொல்வதிலும் அதனால் தேவையில்லாது தன் மீது சந்தேகம் எழுமாறு செய்வதிலும் மட்டுமே அவன் தன் நிலைதடுமாறுகின்றான். ஆனால் உடனடியான பேரிடர் கடந்து ஆழ்ந்து சிந்திக்கும் நேரம் வருகின்றது. அப்போது சமநிலை குலைந்த வெறியிலும் கட்டுக்கடங்காத தீச்செயல்களிலும் ஈடுபடுமாறு தன்னைத்தானே அவன் சித்திரவதை செய்துகொள்வதை நாம் காண்கின்றோம். 


ப-ங்கோவின் படுகொலையே கதையமைப்பின் திருப்புமுனை என்று தோன்றுகின்றது. ஏனெனில் ம-க்பெத்தின் வீழ்ச்சியை அது திடீரென்று தொடக்கிவைக்கின்றது. அது வரையிலும் நிகழ்வுகள் அவனுக்கு வசதியாகவே நேர்ந்தன: அவன் அரியணையை வென்றுவிட்டான்; மால்கம், டானல்பெய்ன் இருவரும் தப்பியோடியதால் அவன் அரசாட்சியைத் தடையின்றிச் சொந்தம் கொண்டுள்ளான். ஆனால் இப்போதோ, அனைத்தும் அவனுக்கெதிராகச் செல்கின்றன. இரண்டாம் படுகொலையின் ஒத்த தன்மை முதற்கொலை பற்றி மற்றவர்க்கு இருந்த சந்தேகத்தை உறுதியாக்குகிறது.  பெருவிருந்துக் காட்சியில் அவன் மீட்கவியலாதவாறு தன்னையே காட்டிக்கொடுத்துவிடுகிறான். அவனுடைய பிரபுக்கள் தப்பியோடுகின்றனர் அல்லது தற்காப்பு மேற்கொள்கின்றனர். 


இவ்வாறாக, ப-ங்கோவின் படுகொலை நிகழ்வதிலிருந்து ம-க்பெத்தின் நல்வாழ்வு நாசமடையத் தொடங்குகின்றது. அப்படுகொலையே அனைத்தும் முடிந்துபோவதின் தொடக்கமாகின்றது. ஆயின், அதை நோக்கிச்செல்லும் படிகள் என்னவாயினும், அம்முடிவு தவிர்க்கமுடியாதது. ங்கனின் படுகொலையைப் பின்தொடரும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அதன் நேரடி விளைவுகளாகும். ங்கன் உயிர்பிழைத்திருந்தால் ப-ங்கோவும் உயிர்வாழ்ந்திருப்பான். முதன்முதல் செய்த கொடுங்குற்றம் ம-க்பெத்தின் வாழ்க்கைப்போக்கை முற்றுமாகத் திசைமாற்றிவிடுகின்றது. அதுதான் மெய்யான பிரிக்கும் கோடு, இன்றியமையாத திருப்புமுனை, வாழ்க்கைப்பாதையின் வழி பிரியும் இடம். இவ்வுண்மை அவனுடைய சொற்களிலேயே வெளிப்படுத்தப்படுகின்றது. 


“குற்றத்தின் பேரெல்லையைக்” கடந்தபின், பாத்திரத்தின் ஈடுபாட்டுத்தன்மை மாறுகின்றது. இதுவரை, ம-க்பெத்தைப் பொறுத்தவரை, அவன் ஆன்மாவினுள் நிகழும் போராட்டத்தை ஆய்வதிலேயே அது மையங்கொண்டிருந்தது. நன்மை, தீமை என்னும் இரண்டின் சமமற்ற போராட்டத்தை நாம் கண்டுவந்துள்ளோம். ஒன்று அவனுடைய தீச்செயல் தயக்கத்தாலும் அச்சங்களாலும் தாங்கப்பட்டுவந்தது. மற்றது அவனுடைய பேரவாவின் ஏக்கங்களாலும் விதியாலும் இயல்கடந்த உதவியாலும் அவன் மனைவியின் தூண்டுதல்களாலும் தாங்கப்பட்டுவந்தது. இப்போதோ போட்டியிருந்த இடத்தில் குறிக்கோள் வந்துள்ளது━ பயங்கரமான நிலைமாறாமை படைத்த குறிக்கோள். “மோசமாகத் தொடங்கிய காரியங்கள் தீங்கினால் தம்மை வலுப்படுத்திக்கொள்கின்றன” என்பதே அவனுடைய கொள்கையாகவும் செயல்வழக்கமாகவும் விளங்குகின்றது. ஏனெனில், அவனுடைய கற்பனைத்திறன் செயலிலிருந்து அவனைத் தடுத்துநிறுத்த ஏறத்தாழப் போதுமானதாக ஒரு சமயம் விளங்கியது. இப்போது அது அவனுடைய மனச்சாட்சி மூலமாகவும் இன்னும் அதிகமாக அவனுடைய அச்சத்தின் மூலமாகவும் இயங்குகின்றது. ங்கனின் படுகொலைக்குப் பழிதீர்க்கக்கூடியவர் என்றும்  அரியணைக்கு உரிமை கோரக்கூடியவர் என்றும் தோன்றும் எவரையும் அகற்றுவதற்கு ஏற்பாடுசெய்யுமாறு அவனை அது தாற்றுக்கோல் கொண்டு தூண்டுகின்றது. ம-க்பெத்தின் நிம்மதி என்னும் கலம் நஞ்சூட்டப்படுகின்றது. நயவஞ்சகத்தை வெற்றிகரமாகச் செய்துமுடித்தது கணநேர இன்பத்தைக்கூட அவனுக்கோ அவளுக்கோ அளிக்கவில்லை. வாழ்க்கை என்பதே மருட்சிப்புனைவுகளும் பீதிகளும் நிறைந்து விடாது வட்டமிடும் ஓயாத மன உலைவின் வெறிநிலை என்றாகிவிடுகிறது. முதல் கோரச்செயலுக்குத் தன்னை பெருமுயற்சி செய்து வளைத்த அவன், இரண்டாவதைக் கோரவெறியும் பெருந்திகிலும் சேர்ந்த கிளர்ச்சிநிலையில்தான் செய்த அவன் படுகொலையைக் கருத்தூன்றித் திட்டமிடுபவனாக ஆகிவிடுகின்றான். விரைவிலேயே அவன் கட்டேதுமற்ற இரத்தவெறி என்னும் மூன்றாம்நிலைக்குள் கடந்துவிடுகின்றான். சூனியக்கார மாயச்சோதரியார் மூவரால் இவனினும் அதிக சாதகம் காட்டப்படும் ப-ங்கோ அவனுடைய தலைநிலை அஞ்சுபொருளாகின்றான்; அதனாலேயே விரைவில் அவனால் பலியிடப்படுகின்றான்.ஆயினும் பெருவிருந்தின்போது குருதிதோய்ந்த மாயக்காட்சி / இல்பொருட்காட்சி விவரிக்கமுடியாத விதத்தில் அவனைப் பழிவாங்குகின்றது. உய்யும் வழிதெரியாத வெறிநிலைக்குள் மேலும் மேலும் ஆழமாகத் தள்ளப்பட்ட ம-க்பெத்துக்கு ஆகமோசமானது என்னவென்று எவ்வழியிலாயினும் தெரிந்தாகவேண்டும். ஆகவே அவன் சூனியக்காரிகளிடமிருந்து அகத்தூண்டுதலின் ஊக்கத்தை நாடுகின்றான். அவர்கள் வருங்காலத்தை முன்னுரைத்தது அவனுள் ஒரு பாதுகாப்புணர்ச்சியை ஊட்டுகின்றது. ஆயின் அது விளைவுபற்றிக் கவலையில்லாது விண்ணையும் மண்ணையும் எதிர்த்துநிற்கும் மூடத்துணிச்சலையே அவனிடம் ஓங்கச்செய்கின்றது. தர்க்கரீதியாக நோக்கினால் அவனுடைய முட்டாள்தனமான நம்பிக்கை சித்திரவதை செய்து குருதிபெருக்கும் அவன் நாட்டிலிருந்து அன்றாடம் கடுந்துயர ஓலமெழச்செய்யும் கொடுஞ்செயல்களைச் செய்யாது அவனைத் தடுக்கவேண்டும். அவனுக்கெதிராக நிறைவேற்றவே முடியாத விடுகதைகளில் தஞ்சம்புகுந்துள்ள ஒருவனில் இக்கொடுமைகள் காரணமற்ற, கட்டுப்பாடற்ற காட்டுமிராண்டித்தனமாகும். ஆனால் ம-க்பெத் நியாயத்தின் முறையீட்டைக் கடந்து அப்பால் வெகுதூரம் சென்றுவிட்டான். குருதி சிந்துவது அவனுக்கொரு வெறிவேட்கையாக ஆகிவிட்டது (“அவன் பித்தனாகிவிட்டான் என்று சிலர் கூறுகின்றனர்.”) அவனுடைய இருப்பின் பிரதானநிலை அமைதியற்று அலையும் செயல்பாடாகவே உள்ளது.


போகப்போக, வாழ்க்கையின் இயல்பான உறவுகளும் ஈடுபாடுகளும் அவன் பார்வையில் மெய்ந்நிலையற்றவையாக மாறிவிட்டன. பொறுக்கவியலாத ஒரு மன இருள் அவன்மீது இறங்கிநிற்கின்றது. தன் மனைவியின் மரணச்செய்தி வந்ததும் முற்றுமுழுதாக உணர்ச்சியற்று அதை அவன் அறிந்துகொள்கின்றான். உயிர்வாழ்வதென்பதற்கே அலுப்பும் இகழ்ச்சியும் ஏளனமும் நிறைந்த ஓர்  உணர்ச்சிவெடிப்பை மட்டுமே அது அவனிடமிருந்து எழுப்புகின்றது. நம்பிக்கை முறிந்த குருட்டுநிலையில் அவன் ஒன்றை மட்டுமே இறுகப்பற்றியுள்ளான். அது அவனுடைய பாதுகாப்புக் குறித்து சூனியக்காரிகள் அளித்துள்ள திடவுறுதியாகும். ஆனால் இறுதியில் ப-ங்கோ தொடக்கமுதலே முன்னறிந்துகூறிய உண்மை மறுக்கமுடியாதவாறு அவன் முன்னிற்கின்றது. கபடவித்தை காட்டும் மாயப்பிசாசுகளின் மெய்யான தன்மையை அவன் காண்கின்றான். உயிரைக் கெட்டியாகப் பற்றியிருக்கும் மிருகவுணர்ச்சியைத் தவிர அவனிடம் எஞ்சியிருப்பது எதுவுமில்லை: 

கம்பத்தில் என்னைக் கட்டிவிட்டார் அவர். 

தப்பிப் பறக்கவுங் கில்லென் யானே.

மாறாகக் கரடிபோல் 

ஆட்டம் முடியுமட்டும் யான் 

போராடித் தீரவேண்டும், வழியேதுமின்றி.

வாழ்க்கை வெறுத்துபோய்ச் சாவுக்கும் துணிந்த இவன்தான் “வீரமிக்க ம-க்பெத்!”, “வீரத்திருமகளின் வெற்றிநாயகன்”, ஈடிணையற்ற உறவினன்” என்றெல்லாம் முன்னம் சிறந்து விளங்கியவன்!


ம-க்பெத் சீமாட்டி 

 

ஆங்கிலத் துன்பியல் இலக்கியத்தின் அரக்கியாகிய ம-க்பெத் சீமாட்டி ம-க்பெத்தின் குணவமைப்பைத் துலக்கிக்காட்டுபவளாக  இயற்கையாகவே அமைக்கப்பட்டுள்ளாள். “பயங்கரமான உறுதிபடைத்த மனத்துணிபும்” தன் முடிவில் மாறாத இரும்பு நெஞ்சுரமும் கொண்டவள் அவள். கற்பிதத்திறன் ம-க்பெத்துக்கு எப்படியோ அப்படி இவளுக்கு இக்குணங்கள். அவரவர் குணவமைவில் மற்ற யாவற்றையும் கடந்து விஞ்சி மேம்பட்டு நிற்பது இத்தன்மைகளேயாகும். அவளுக்கு அவன்மீதுள்ள செல்வாக்கு, அவன் சம்மதத்தைக் கொணர்வதில் அவளுடைய வெற்றி ஆகியவற்றின் ரகசியம் இதுவே. கதையமைப்பில் அவளுடைய பங்கை முற்றும் நிறைவேற்றுவதற்கும், அவனுடைய தவறுகளைத் திருத்துவதற்கும் கதைப்போக்கில் நேரும் பெரும் நெருக்கடிகளின்போது அவனைக் காப்பாற்ற வருவதற்கும் அவளுக்கு இயலுமாறு இது செய்கின்றது. ஆனால் இதுவே அவளுடைய அழிவுக்கும் காரணமாக அமைகின்றது. 


தன்னுடைய மற்ற ஆற்றல்களின் தாங்குதிறனின் உச்சத்தையும் கடந்த கடும் அழுத்தத்தைத் தன்மீது சுமத்திச் சிறிது காலம் தாங்குமாறு இது அவளைச் செய்கின்றது. உண்மையில், அவனுடைய கற்பிதத்திறனின் மீமிகை போன்றே அனைத்தையும் அதிகாரம் செய்யும் அவளுடைய துணிவு குணவமைவின் சக்திகளின் முறையான பொருந்தமைவைக் குலைக்கின்றது. மனச்சாட்சி அல்லது பொதுவான முன்னெச்சரிக்கை என எக்கட்டுப்பாட்டையும் அறியாத, முன்னோக்கு அல்லது அச்சம் என்பன குறித்துச் சிறிதும் அக்கறை காட்டாத ஓர் இயல்புமீறிய அம்சம் அது. இயல்புகடந்த கடுமுயற்சிக்கு ஆதார ஊற்று அதுவே. அம்முயற்சியிலிருந்து எழும் எதிர்ச்செயல் மொத்த அமைப்பையும் முறித்தழிக்கின்றது. 


ம-க்பெத் போலல்லாது, அவள் மிக உச்சமான தற்சார்புடையவள். அவனோ ஒத்துழைப்பு நாடி அவள்பால் இயல்புணர்ச்சியாகத் திரும்புகின்றான். அவனுடைய அச்சுறுத்தும் வஞ்சத்தீர்வு அவளுடைய ஒத்துழைப்புக்கு மாற்றாகத் தன் மரணக்கேடான தூண்டுதலை இடும்வரை அவன் இவ்வாறு செய்கின்றான். அறிவுக்கூர்மை என்னும் வகையிலும் அவள் அவனுக்கு மேலாகவே விளங்குகின்றாள்━ போர்ஷியா ஸ்ஸ-னியோவுக்கும் ரோஸலின்ட் ஆர்ல-ன்டோவுக்கும் இருப்பது போன்றே. 


எடுத்துக்கொண்ட காரியத்தில் மேலே தொடர்வதற்கு ம-க்பெத் கொண்டுள்ள அரைகுறை மனநிலையை எத்துணைத் திறமையோடு எதிர்கொண்டு அவனுடைய பலவீனமான அம்சங்களை மோதித் தாக்குகின்றாள் அவள்! கொடுஞ்செயல் ம-க்பெத்திடம் உண்டாக்கிய பாதிப்பை எவ்வளவு விரைவாக━ ஆனால் காலங்கடந்து━ அவள் கண்டுணர்கின்றாள்! பெருவிருந்துக்காட்சியில் எத்துணைக் கூர்மதியும் சமயோசித புத்தியும் அவள் புலப்படுத்துகின்றாள்! அதுபோது அவன் உள்ளச்சமநிலையை மீட்பதற்கு முதலில் ஒரு வழியையும் அடுத்து இன்னொரு வழியையும் பின்னர் இன்னும் வேறொரு வழியையும் அவள் கைக்கொள்கின்றாள். 


ஆயினும் மனக்காட்சித்திறனின் வறண்டநிலைக்கு அவளுடைய புத்திக்கூர்மை சரியீடாக அமையவில்லை. அத்திறனில் அவள் நிச்சயமாகவே பற்றாக்குறையாக இருக்கின்றாள். மெய்யான கற்பிதம் இணைந்த உள்நோக்குத்திறனுடன் இருந்திருந்தால் அவர்கள் செய்த கொடுங்குற்றம் ம-க்பெத்திடமும் அவளிடமும் உண்டாக்கப்போகும் பாவபுண்ணியவுணர்வுவழி விளைவுகளைப் பற்றி அத்துணைத் திகைப்புறுத்தும் தப்புக்கணக்கை அவள் போட்டிருக்கமாட்டாள்.


அச்சத்தினாலும் செயற்தயக்கத்தினாலும் அக்கொடுஞ்செயலிலிருந்து அவன் பின்வாங்கினாலும் அதைச் செய்தபின் அதைச் செய்யாதநிலைக்கே மீளவேண்டும் என்று அவன் விரும்ப மாட்டான் என்றே அவள் எண்ணுகின்றாள். தன் பாவத்தின் பேரின்பத்தை அறுவடைசெய்ய அவனுக்கு இயலும் என்றே அவள் எண்ணுகின்றாள். 


அது அவர்கள் இருவரினுள்ளும் உண்மையில் உண்டாக்குகின்ற தலைகீழ்மாற்றத்தைப் பற்றிச் மிகச்சிறிய ஒரு முன்னுணர்வைக்கூட  அவள் ஒருபோதும் காட்டவில்லை. கருத்துப்பரப்பின் இக்குறைபாடு ஊடுருவும் மனக்காட்சித்திறனின் பற்றாக்குறையையே நிலைநாட்டுகின்றது. ஷேக்ஸ்பியரின் படைப்புகள் அனைத்தினும் இந்நாடகத்தைத் தனிச்சிறப்புடன் எடுத்துக்காட்டும் மனக்காட்சித்திறன் மிகுந்த நாவன்மையின் தலைசிறந்த வெடிவெளிப்பாடுகள் யாவுமே ம-க்பெத் நாவினின்று வருவன என்பதும் குறிப்பிடத்தக்க அளவு முக்கியமானதாகும். கிளர்ச்சியும் பரபரப்பும் மிகுந்த அவனுடைய மனஓட்டம் அவளுடைய உணர்வாற்றலுக்கு அப்பால் அவனைக் கடத்திச்செல்லும் தருணங்களும் உள்ளன (எ-டு: 2.2.40).


மனச்சாட்சியைப் பொறுத்தவரை ம-க்பெத்தைக் காட்டிலும் குறைவாகவே அவள் அதைப் புலப்படுத்துகின்றாள். உண்மையில், பெருங் கிலியூட்டுகின்ற தூக்கத்தில் நடக்கும் காட்சிகூட அவளுக்கு மெய்யான கழிவிரக்கம் இருப்பதாக நாம் கருத நியாயம் தரவில்லை என உறுதியாகக் கொள்ளப்பட்டுள்ளது:

 கணவனைப் போன்றே அவள் இதழினின்றும்  

கழிவிரக்கம் என்றொரு சொல் வீழ்வதில்லை எந்நாளும். 

ஆயினும், மனிதர்களை அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதைக் காட்டிலும் அவர்கள் எவ்வாறு நமக்குத் தோன்றுகின்றார்கள் என்பதைக் கொண்டே நாம் மதிப்பீடு செய்யவேண்டும். ம-க்பெத் சீமாட்டி உடலிலும் ஆன்மாவிலும் சிதைந்திருப்பதைக் காணுங்கால் அத்தகைய தலைகீழமறிவுக்கு மனச்சாட்சியின் செயல்பாடு ஒரு ஆற்றல்மிக்க காரணமாக இருக்கத்தான் வேண்டுமென்று நமக்குத் தோன்றுவதாக நான் நினைக்கின்றேன். வேறு காரணங்களும் உண்டென்பதில் ஐயமில்லை. 


அருவருப்பூட்டும் அம்முயற்சியால் எழும் அதிர்ச்சிப் பின்னடைவு; மரணக்கேடான அவ்விரவின் காட்சிகளால் எழுந்த கண்கூடான பயங்கரம்; இயல்பான மனத்தின்மையால் உறக்கத்தின்போது கட்டுப்படுத்த முடியாத அக்காட்சிகளின் திகைப்பூட்டும் நினைவு; ம-க்பெத்திடமிருந்து ஒதுக்கமுற்றதன் கசப்பு (ஏனெனில் குற்றப்பொறுப்பில் பங்குவகிப்பதன் பிரித்துவைக்கும் ஆற்றல் இந்நாடகத்தின் மிகப்பெரும் பாடங்களில் ஒன்றாகும்); தோல்வியும் குலைந்தழிந்த நன்நம்பிக்கைளும் அடங்கிய முற்றமுழுதுறழ்வான உணர்ச்சி; சென்றதற்கு இரங்கி நினைந்துநினைந்து ஏங்குவதான மெல்ல இயங்கும் நஞ்சு━ அதற்கு ஆண்களிடமுள்ள செயலில் ஈடுபடுதல் என்னும் மாற்றுமருந்து அவளிடமில்லை. நம்பிக்கை வறட்சியால், மனமுறிவால் ஆன இவளின் மறு உருவாக இவளை ஆக்குவதற்கு இவையனைத்தும் ஒன்றிணைந்துள்ளன. ஆயினும், இவையனைத்தினும் ஆழமாக, அவளுடைய இருப்பின் மிக அருகே அரித்துத் தின்பதாக, அவளுடைய மனச்சாட்சி, பெரிதும் சீற்றமூட்டப்பட்ட மனச்சாட்சி இருந்தேயாக வேண்டும். 


வரையறையின்றி அறவே வெறுத்தொதுக்கப்படுவதிலிருந்து ம-க்பெத் சீமாட்டியைக் காக்கும் அவளுடைய குணமமைவிலுள்ள நல்லதானது ம-க்பெத்தின் நற்பான்மையைக் காட்டிலும் வெளிப்படைத்தன்மை குறைந்ததாகும்.ஆயினும் அவளுடைய செயல்களால் பொய்ப்படுத்தப்படும் அவளுடைய நற்தன்மை பல்வேறு பண்புக்கூறுகளால் குறிப்பாகக் காட்டப்படுகின்றது. இவ்வகையாக அவள் தன் கணவனிடம் முற்றுமுழுதாகப் பாசமும் பற்றும் கொண்டுள்ளாள். “அவளுடைய பேரவா முழுதுமே அவனுக்காகவும் அவன் மூலமாகவும் என்றுள்ளது. தன்னைப் பற்றியும் தன் உயர்ச்சியைப் பற்றியும் அவள் ஒருபோதும் பேசுவதில்லை. அவனிலும் அவனுடைய மகோன்னதத்திலுமே அவள் வாழ்கின்றாள்.” 

அவளுடைய நடையுடைத்தோற்றத்தின் மென்பண்பும் கனிவும் பிறரைக் கவர்வதிலும் வசீகரிப்பதிலும் அவளுக்குள்ள ஆற்றலுக்குச் சான்றுகூறுகின்றன. அவன் மனமும் செயலும் நிலைகுலைந்து போனதும் வசைமொழி ஒருசொல்கூட அவள் கூறவில்லை. மாறாக, அவனுடைய இன்னலத்துக்கே மிகவும் அக்கறைகொண்டுள்ளவளாகக் காணப்படுகின்றாள் (3.4.141). இழிவாக ஒருவரையொருவர் குற்றம்சாட்டுதல் என்பது அவர்களுக்கிடையே ஒருபோதும் நிகழ்வதில்லை என்பது மெய்யாகவே அவர்களுடைய உறவின் மாட்சிமைமிக்க தனிப்பண்புகளில் ஒன்றாகும். அவர்கள் ஒருவரையொருவர் நாசம்செய்துவிட்டனர் என்பதை அவர்கள் நன்கறிவார்கள்━ தொடக்கத்தில் செய்த குற்றச்செயலின் கருத்துமுன்வைப்பினால் அவன் அவளையும் அவனுடைய இன்னும் மேலான பகுத்துணர்வையும் மீறி இடைவிடாது மீக்கடுமையாக அவனை அதில் தூண்டிவிடுவதால் அவள் அவனையும். ஆயினும் அவர்கள் வெவ்வேறான தத்தம் தண்டனைகளை நோக்கிப் பேச்சின்றியும் விலக்கிய விழிகளுடனும் பிரிந்துசெல்கின்றனர்━ இடித்துரை ஏதுமின்றி. கெடுவழி செலுத்தப்பட்டும், கெடுவழி செலுத்துபவளாகவும் இருந்தபோதும் விசுவாசமிக்க ஒரு மனைவியாக அவள் நமக்குக் காட்டப்படுகின்றாள். அவ்வாறே அவளுடைய இயற்கையில் ஒரு தாய்க்குரியதும் சேய்க்குரியதுமான மென்கனிவின் சிறுகுறிப்புகளும் உள்ளன (1.7.54-59, 2.2.13&14). 


இஃதன்றியும், இருள்மாயச் சக்திகளை அவள் (மனக்கற்பிதத்திறனாலன்றி வெற்றுச் சொல்லலங்காரமாக) வேண்டி வரவழைப்பதும் பெண்மையின் மென்மையை அவள் அறியாதவளல்லள் என நிரூபிக்கின்றது. “என் பால்வேறுபாட்டுத் தன்மையை மாற்றுவீர்!” என்று வேண்டும் தேவை ஒரு கானெரிலுக்கு ஒருபோதும் நேராது. “நேரடியாகக் கொடுஞ்செயல் புரிய” இன்னும் அதிக வல்லமையை வேண்டும் தேவை ஒரு ரீனுக்கு ஒருநாளும் இருக்காது. “மனச்சாட்சியின் குத்தலாக வரும் இயற்கை” என்பதை உற்றறிய அல்லது உணர்ந்துகொள்ளக்கூட பாம்புச்சடைப் பேய்மகளிரான அவ்விருவருக்கும் இயலாது. ஆனால், கொடும்பழியான அந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு  ஏதோவோர் இரக்கமற்ற கொடுங்குணத்தின் சேர்க்கையால் தேவையான ஊக்கமும் உரமும் பெறுவது அவசியம் என்று ம-க்பெத் சீமாட்டி நன்கறிவாள். இன்னும், அவளுடைய பிரார்த்தனைகள் பலித்துவிட்டது போன்றே தோன்றுகிறது: மீளாத்துயில் கொள்ளப்போகும் மன்னனின் துயிலறைக்குள் ஒரு பெண்ணால் செல்லமுடிகின்றதென்றால் சிறிது நேரத்துக்காவது அவள் தன் பால்வேறுபாட்டுத் தன்மையை இழந்துதானிருக்க வேண்டும். ஆனால் இயற்கை மீண்டுவிடுகின்றது. 


அக்கொடுங்குற்றதால் ம-க்பெத் மிருகமாக மாறிப்போகின்றான். ஆனால் அறவுணர்ச்சிவழிப்பட்டதும் தன்மீதானதுமான வன்முறையிலிருந்து எழுந்த எதிர்விளைவால் அவளுடைய இன்னும் பண்படுத்தப்பட்ட மனப்பாங்கு முறிந்துபோகின்றது. 


ஷேக்ஸ்பியரின் பிற படைப்புகளினின்று ம-க்பெத் சீமாட்டி, ஹ-ம்லெட் என்னுமிருவரும் அவர்கள் எழுப்பும் கவனத்தின் தீவிரத்தாலும் தடுமாற்றத்தாலும் தனித்து நிற்கின்றனர். ஷேக்ஸ்பியர் தீட்டியுள்ள பெண்டிர் அனைவருள்ளும் இந்த நொய்தான ஆனால் பணிதலில்லாத வடநாட்டு அரசி போல் மனத்தைக் கவர்பவர் (“பழைய நைல்நதியின் நாகப்பாம்பு”* உட்பட) எவருமில்லை. அவள் மிகப்பெரும் மறுப்பை, தன் பாலினத்தின் மறுப்பையே, செய்கின்றாள், பெருந்துயர் அனுபவிக்கின்றாள்━ தன் இறுதிமூச்சு வரையிலும்.

*க்ளியோப-ட்ரா. 


ப-ங்கோ


ப-ங்கோ ம-க்பெத்தின் உயிர்நண்பன். ஆனால் கதைப்போக்கில் அவனுடைய போட்டியாளன் என்றும் அவன் ஆகின்றான். ம-க்பெத்தைப் போன்றே அவனும் மாவீரன். மனித இயல்புகளான ஏக்கங்களும் ஆசைகளும் அவனுக்குமுண்டு. சூனியக்காரிகளின் ஆரூடங்களில் அவனுக்கென்ன இருப்பது யாதென்று அறிய ஆவல் அவனுக்கும் இருக்கின்றது. சூனியக்காரிகளைப் பற்றிய கனவுகளால் அவன் உறங்கவியலாதிருக்கின்றான். அவனாற்றும் தனியுரையில் அவனுடைய மனக்கசப்பு நன்றாகவே புலப்படுகின்றது. ம-க்பெத்தைக் கெடுவழி செலுத்திய முனைப்பான பேராசை அவனுக்கும் இருப்பது போன்றே தோன்றுகின்றது. ம-க்பெத்தை மன்னனைக் கொலைசெய்த பின்னர் அவன் அதைச் சந்தேகிக்கின்றான். ஆனால் ம-க்பெத்தின் மீது குற்றம்சாட்டி அதை அவன் வெளிப்படுத்தவில்லை. எனவே, ஒருவிதத்தில் அதற்கு அவன் உடந்தையும் ஆகின்றான். அவன் கொல்லப்பட்டது அநியாயமாகத் தோன்றினாலும் அவன் “மூடிய வாயால் உடந்தையாய் நின்றதற்கு” இது தண்டனையாக அமைந்து கவிதாநீதியை நிலைநாட்டுகின்றது என்றே கொள்ளவேண்டும். ‘உலகில் தீமை ஓங்குவதற்குத் தீயவர்களின் முயற்சியைக் காட்டிலும் நல்லவர்களின் அமைதியே முதற்காரணமாகும்’ என்பதை மறக்கக்கூடாது.




நாடகக் கதாபாத்திரங்கள் 


டங்கன் (Duncan) ஸ்காட்லாந்து மன்னன்

மால்கம் (Malcolm) {                    டானல்பெய்ன் (Donalbain) {அவன் மகன்கள்

ம-க்பெத் (Macbeth) {   ப-ங்கோ (Banquo) {அவன் படைத்தளபதிகள் 

ம-க்ஃப் (Macduff) { லென்னாக்ஸ் (Lennox) { ராஸ் (Ross) { ஸ்காட்லாந்து நாட்டுக் கோமான்கள் மென்டீத் (Menteith) {   அ-ங்கஸ் (Angus) { கெய்த்நெஸ் (Caithness ) {

ஃப்ளீயன்ஸ் (Fleance) ப-ங்கோவின் மகன்

ஸீவார்ட் (Siward) நார்தம்ர்லாந்து பெருங்கோமான்,                               இங்கிலாந்துப்படையின் தலைமைத்தளபதி    இளம் ஸீவார்ட் அவன் மகன் 

சிறுவன் ம-க்ஃபின் மகன் ஆங்கிலேய மருத்துவன் தளபதி வாயிற்காவலன்            வயோதிகன் 

ம-க்பெத் சீமாட்டி                                                          ம-க்ஃப் சீமாட்டி ம-க்பெத் சீமாட்டியின் பாங்கி 

கோமான்கள், நற்றகையாளர், வீரர், கொலைஞர், ஏவலர், தூதுவர்

                                                    ஹெகடி                                 சூனியக்காரிகள் மூவர்                                 உருவெளித்தோற்றங்கள் 

நிகழிடம்: ஸ்காட்லாந்த்து, இங்கிலாந்து  


Comments

Popular posts from this blog

A Piece From Shakespeare's Macbeth. ஸேக்ஷ்பியரின் ம-க்பெத் நாடகத்திலிருந்து ஒரு கீற்று.

திறம் மாறிய சொற்கள்

Comparitive Literature: Kannadasan, Kamban and Shakespeare