‘அவன்’ என்பதா? ‘அவர்’ என்பதா? வேண்டாம் போலிவேடம்!

 


            ‘அவன்’ என்பதா? ‘அவர்’ என்பதா? வேண்டாம் போலிவேடம்!




‘தமிழ் இலக்கியத்தில் புதிய சகாப்தம் படைத்தவன் பாரதி.’ 

‘மகாகவி பாரதி பாஞ்சாலி சபதம் என்னும் ஒப்பற்றதொரு குறுங்காவியத்தைப் படைத்தார்.’


பாரதியைக் குறித்து எழுதும் போது இவ்விருவகை விகுதிமுறையையும் நாம் காண்கின்றோம்.

சிலர் அவரை ஒருமையில் குறிப்பிட்டு ‘அவன்’ என்கின்றனர். வேறு சிலர் அவருக்கு

மரியாதைப் பன்மை தந்து ‘அவர்’ என்கின்றனர். இவற்றுள் எது முறை?


இந்தப் பிரச்சினை ஆங்கிலத்தில் இல்லை. அதில் ஒருமை பன்மை உண்டே தவிர மரியாதைப்

பன்மை என்றொன்று கிடையாது. மன்னனுக்கும் ஒருமைதான்; மாடனுக்கும் ஒருமைதான்.


தமிழில் ஆண்பால் ஒருமைக்கு ‘அன் விகுதியும் பெண்பால் ஒருமைக்கு ‘அள்’ விகுதியும் என்றே

சங்ககாலத்தில் வழங்கியது. ‘ஆர்’ என்னும் விகுதி பன்மைப்பொருளில் மட்டுமே வந்தது.

மரியாதைப் பன்மை விகுதி என்று ஒன்று அன்று இன்று. அரசனோ ஆண்டியோ தந்தையோ

மகனோ ஆசிரியரோ குருவோ தேவனோ தெய்வமோ எவரென்றாலும் ‘அன்’ விகுதி மட்டுமே

வழங்கப்பட்டு வந்தது.


பெருங்காப்பிய அளவில் ஒருமை நிலைக்கும் மரியாதை கருதி ‘ஆர்’ விகுதியிடும் வழக்கத்தை

முதன்முதலில் தொடங்கியவர் சேக்கிழார் என்றே தோன்றுகின்றது. அவர் ஆக்கிய

பெரியபுராணம் இவ்விகுதி நனிநிறைந்து காணப்படுகிகின்றது. சிவன், நாயன்மார்,

அடியார்கள், அவர்தம் மனைவிமார், பிள்ளைகள், பணியாட்கள் என மதிப்புக்குரியவர்களாகக்

கொள்ளப்பட்ட பலதரப்பட்டவர்களுக்கும் இவ்விகுதி இந்நூலில் வழங்கப்பட்டது. சில போது

அரசனுக்கு ‘அன்’ விகுதி வைக்கப்பட்டது என்பதும் நோக்கத்தக்கது.


பெரிய புராணத்துக்குப் பின் வந்த படைப்புகளில் சில ‘அன்’ விகுதியையும் ‘சில ‘அர்’

விகுதியையும் பயன்படுத்தின. 


இக்காலத்தில் மதிப்பளிக்கும் போது ‘அர்’ விகுதியும் மற்ற போது ‘அன்’ விகுதியும்

வழங்கப்படுகின்றன. பன்மையானால் ‘அவர்கள், இவர்கள்’ என்று சொல்லப்படுகின்றது. 


இந்நிலையில் பாரதியை ‘அவன்’ என்று கூறுவதை உரிமை நெருக்கமாகவோ பண்டைத்தமிழ்

வழக்காகவோ சிலர் கொண்டு செய்கின்றனர். இவர்கள் வள்ளுவரையும் கம்பரையும்கூட

இவ்வாறே அழைக்கின்றனர். ஆனால் உமறுப்புலவரையோ வீரமாமுனிவரையோ இவர்கள்

இவ்வாறு கூறுவதில்லை!.

கண்ணதாசனின் நிலை இரண்டுங்கெட்டதாக உள்ளது. சிலர் ‘அவன்’ என்று கூறி அவரைப்     பழந்தமிழ் நிலைக்கு உயர்த்துகின்றனர்! மற்றவர்கள் ‘அவர்’ என்றே இன்னமும்     அழைக்கின்றனர். 

ஒரே கட்டுரையில் ஒரு படைப்பாளியைச் சில இடங்களில் ‘அவன்’ என்றும் வேறிடங்களில்

‘அவர்’ என்றும் வழங்கும் வேடிக்கையையும் நாம் காணலாம்!

‘அவன்’ என்பதைத் தெரிந்தெடுத்துச் சிலருக்கு மட்டுமே பயன்படுத்துவோரின் போக்கு

போலி வேடம், மாய்மாலம்.என்பது கண்கூடு. ஒரு நெறியைக் கடைப்பிடிப்பதானால்

அதில் மாற்றமின்றி நிற்க வேண்டும். பாரதியை ‘அவன்’ என்றுரைப்போர் பாரதிதாசனை

அவ்வாறு கூறுவார்களா? திராவிடக் கூட்டம் பொங்கி எழுமே! அதை எதிர்கொள்ளும்

துணிச்சல் இவர்களுக்கு உண்டா? புதுமைப்பித்தனை ‘அவன்’ என்று கூறுவோர்

அண்ணாதுரையை, கருணாநிதியை அவ்வாறு கூறுவார்களா? முகமதுவை அவ்வாறு

கூறுவார்களா? சைவ வைணவப் பெரியார்களை இவ்வாறு அழைத்தாலும் எதிர்ப்பு

கட்டாயம் எழும்.


இறைவன் விஷயம் வேறு. அவன் நம்முள் இருப்பவன். அவனை எப்படி வேண்டுமானாலும்

அழைக்கலாம். (சேக்கிழார் இறைவனைப் பன்மை கொண்டுதான் கூறினார் என்பதையும்

நோக்குக.)

எனவே, நம்மினும் பெரியோர் அனைவருக்குமே பன்மை விகுதியளிப்பதே முறையாகும்.

சிலரை ஒருமையிலும் வேறு சிலரைப் பன்மையிலும் கூறும் போலிவேடம் வேண்டாம்.


Comments

Popular posts from this blog

A Piece From Shakespeare's Macbeth. ஸேக்ஷ்பியரின் ம-க்பெத் நாடகத்திலிருந்து ஒரு கீற்று.

திறம் மாறிய சொற்கள்

Comparitive Literature: Kannadasan, Kamban and Shakespeare