தனித்தமிழ் அழிவழி!

                                         தனித்தமிழ் அழிவழி!


வேற்றுமொழிக் கலப்பின்றி எம்மொழியும் வளரமுடியாது. வளர்ச்சி இல்லையேல்

அம்மொழி தேய்ந்து, அழிந்து போகும். தமிழில் வேற்றுமொழிச் சொற்கள்

கூடாதென்போர் தமிழுக்குப் பெருந்தீங்கு செய்கின்றனர்.

            சொல்வளம் (vocabulary) என்பது யாது? மொழி உரைக்கும் பொருள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனிச் சொல், அதுவும் ஒற்றைச்சொல், இருக்கவேண்டும். அச்சொல் வேறு பொருளையோ பொருட்களையோ குறித்தாலும் அப்பொருள் தலைப்பொருளாகவாவது அமையவேண்டும். அப்படியானால் பேரகராதியில் குறிப்பிட்ட பொருள் முதலாவதாக வைக்கப்படும். அவ்வாறன்றி, வேறு பொருளைத் தலைப்பொருளாகக் கொண்ட ஒரு சொல்லை குறிப்பிட்ட ஒரு பொருளுக்கும் பயன்கொள்வது தவறன்று, ஆயின் சிறப்பின்று. அவ்வாறே இச்சொற்கள் கொண்டு உருவாவதும் தவறன்று, ஆயின் சிறப்பின்று. இதற்கு எடுத்துக்காட்டுகள் பல சொல்லிக்கொண்டே போகலாம். எனின் இரண்டோடு அமைகின்றேன். 


“குடும்பம்”, “காரணம்” என்பவற்றுக்குத் “தனித்தமிழில்” நடைமுறைப் பயனுள்ள சொற்கள் கிடைக்கவில்லை. (இவை சமஸ்கிருதத் சொற்கள் என்பதுகூட நம்மில் பலர் அறியோம்!) “குடி”, “மனை” என்னும் இரு சொற்களைப் பேரகராதி வழங்குகின்றது. இவற்றுள் அதிகம் வழங்குவது “குடி”. ஆயின் அச்சொல்லுக்கு நான்காம் பொருளே “குடும்பம்” என்பது.


அவ்வாறே “காரணம்” என்பதற்கு “அருத்தம், அபதேசம், ஆதி, ஆஸ்பதம், ஏது (ஹேது), நிபம், நிமித்தம், நீபம், முகாந்தரம், மூலம், யோனி, விடயம், வைசிகம்” ஆகிய சமஸ்கிருதச் சொற்களும் “சப்பு, சபப்பு” என்னும் உருதுச்சொற்களும் தரப்பட்டுள்ளன. இவற்றுள் ஏது (ஹேது), நிபம், நிமித்தம், நீபம், முகாந்தரம் ஆகியவற்றுக்குக் “காரணம்” என்பது தலைப்பொருள். “அபதேசம், ஆஸ்பதம், மூலம், யோனி, விடயம், வைசிகம்” ஆகியன “காரணம்” என்பதைத் துணைப்பொருளாகக் கொண்டவை.


ஆங்கிலத்தில் “வழக்குத் தொடுக்கும் காரணம்” என்பதை “Cause of action” என்பார்கள். “நியாயம்” என்னும் சொல்லுக்கு இப்பொருளும் உண்டு. இக்குறிப்பான பொருளை “காரணம்” என்னும் பொதுபொருளோடு குழப்பிக் கொண்டு “நியாயம்” என்றால் “cause” என்றுள்ளார்கள் சொற்குவையில்!


“வயணம், வாசி” என்னும் சொற்கள் சமஸ்கிருதவழிப் பிறந்திருக்கக்கூடும். அதுவும் “காரணம்” என்பதைத் துணைப்பொருளாகவே கொண்டுள்ளது.


தனித்தமிழில் “காரணம்” என்பதற்கென “அடிவரலாறு, இடை, கடன், கிழங்கு, தலைக்கீடு, திறம், திறவு, நாற்றங்கால், பற்றாசு, பொருட்டு, முதல், முதனிலை, முன்னிலை, மூடு, வகை, வழி, வாயில், வித்து, வேர்” என்பன வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் “அடிவரலாறு, தலைக்கீடு, பொருட்டு” என்பன மட்டுமே காரணம்” என்பதை முதற்பொருளாக உடையன. மற்ற சொற்கள் அதைத் துணைப்பொருளாக மட்டுமே உடையன. “அதற்காக” என்னும் பொருளில் “அதன் பொருட்டு” என்று வழங்குகின்றோம். ஆயின் “காரணம்” என்னும் பொருளில் எவரேனும் மேற்கண்ட சொற்களைக் கையாள்வாரா? “குடும்பம்” என்பதற்கு நடைமுறையில் வேறு தமிழ்ச்சொல் நம்மிடமுண்டா?


இவை போன்று தனித்தமிழ்ச்சொல் இல்லாத பொருள்கள் நூற்றுக்கணக்காக உள. ஆயிரக்கணக்காகவும் இருக்கக்கூடும்! அவற்றை வேறொரு சமயம் பார்த்துக்கொள்ளலாம்.


Comments

Popular posts from this blog

A Piece From Shakespeare's Macbeth. ஸேக்ஷ்பியரின் ம-க்பெத் நாடகத்திலிருந்து ஒரு கீற்று.

திறம் மாறிய சொற்கள்

Comparitive Literature: Kannadasan, Kamban and Shakespeare