தினமணி நாளிதழில் ஞாயிறுதோறும் தமிழ்மணி எனும் சிறப்பான பகுதி தமிழிலக்கியம் பற்றிய கட்டுரைகளுடன் வருகின்றது. என் கட்டுரை ஒன்றும் அதில் வெளிவந்துள்ளது.
நிற்க. கட்டுரைகளில் தவறான கூற்றுகள் வருவதுமுண்டு. அவை பற்றி நானும் எழுதியனுப்புவதுண்டு. அவ்வகையில் இரண்டை இங்குக் காணலாம். இவற்றின் சுருக்கப்பட்ட வடிவங்கள் தமிழ்மணியில் வெளிவந்துள்ளன.
அன்புடையீர்!
29-04-18 தேதியிட்ட தமிழ்மணி கண்டேன். காப்பியங்களில் அறிவியல் ஆளுமை என்று ஒரு கட்டுரை அதில் வந்துள்ளது.
"மணிகள் அனைத்திற்கும் மூலப்பொருள் ஒன்றுதான் என்பதை இளங்கோவடிகள் கூறியுள்ளார். அந்த மூலப்பொருள் எது என்பதைத்தான் இன்றைய அறிவியல் உலகம் கண்டறிந்துள்ளது." இது கட்டுரையிலுள்ள முதற்கூற்று.
மணிகள் அனைத்திற்கும் மூலப்பொருள் ஒன்றுதான் என்பதே முதற்கண் முழுத்தவறு. ஒவ்வொரு வகை மணியும் வெவ்வேறு மூலப்பொருட்களால் ஆனவை என்பதே மெய்.
இளங்கோவடிகள் 'ஒருமைத் தோற்றத்து' என்றுள்ளார். இதற்கு உரை 'ஒன்றுபட்ட பிறப்பு' என்று தரப்பட்டுள்ளது. மணிகள் மலையிலும் மண்ணிலும் கிடைப்பதையே இது குறிக்கும். அவற்றின் மூலப்பொருள் ஒன்றே என்று இங்கு கூறப்படவேயில்லை.
கட்டுரையாளரின்கூற்று 'வலிந்து பொருள் கோடல்' என்பதில் அடங்கும்.
வானம் கடலில் இருந்து முகந்த நீரை மழையாகப் பெய்கின்றது என்பதைப் பட்டினப்பாலை கூறியுள்ளது என்று அடுத்த பத்தி தெரிவிக்கின்றது. கடல் மட்டுமல்லாது நிலத்திலிருந்து ஆவியாகும் நீரும் வானுக்குச் சென்று மழையாகத் திரும்பி வருகின்றது என்று ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே கிரேக்க தத்துவ மேதை அரிஸ்டாடில் தெளிவாகக் கூறியுள்ளார். எனவே, இத்தகவல் பல இடங்களிலும் அறியப்பட்ட ஒன்று. தமிழர்கள்தான் இதைக் கண்டுபிடித்தனர் என்று நாம் உரிமை கொண்டாடுவது பொருந்தாது.
கோள்களைப் பற்றித் தமிழர் தொன்றுதொட்டே அறிந்திருந்ததாகவும் மற்றைய நாட்டினர் பிற்காலத்தில்தான் அவ்வறிவு பெற்றார்கள் என்றும் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இவ்வறிவு பண்டைக்காலத்திலேயே பல நாடுகளிலும் பரந்து விளங்கியது. நாம் இன்றும் வழங்கும் பஞ்சாங்கம் தொன்றுதொட்டு வட இந்திய முறைப்படிதானே கணிக்கப்படுகின்றது!
பொறியியல் சாதனைகள் என்று கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கும் கரும்பு பிழியும் இயந்திரமும் திரைசீலை நகர்த்தும் இயந்திரமும் நகைப்புக்குரியவை. அவை பற்றி மேலும் பேசாதிருத்தலே நலம்.
'லைவ் டெலிகாஸ்ட், வீடியோ தொடர்பு' என்றெல்லாம் இருந்ததாகக் கட்டுரையாளர் கதைக்கின்றார். இவை உண்மையில் இருந்தன என்பதற்கு எச்சான்றும் இல்லை. இவை மக்களின் பயன்பாட்டில் வழங்கி வந்ததாக எந்த வரலாறும் இல்லை. வானூர்தியின் கதையும் இதுவே. இது போன்ற கற்பனைக் கண்டுபிடிப்புகள் பல நாட்டுக் கதைகளிலும் உண்டு. அவை உண்மையிலேயே இருந்திருந்தால் என்னவாயின? வரலாற்றுக் குறிப்பு எதுவும் அவை பற்றி ஏனில்லை?
பேசாமல் கல்லைப் பெண்ணாக்குவது, கூடுவிட்டுக்கூடு பாய்வது, சாம்பலுக்கு உயிர் கொடுப்பது போன்றவற்றையும் தமிழர் அறிவியலில் சேர்த்துக் கொள்ளலாமே?
கம்பர் பறக்கும் தேர் பற்றிக் கூறினார் என்றால் அது வட இந்திய வால்மீகி எழுதிய மூலத்திலிருந்து அல்லவா பெறப்பட்டது? இதில் தமிழர் அறிவியல் என்ன இருக்கின்றது?
உறுப்பு மாற்று முறை புராணத்தில் வந்ததேயன்றி அன்றாட வாழ்க்கையில் நடந்ததா?
பண்டைத் தமிழரின் மெய்யான பெருமைகளை விடுத்து இவ்வாறு போலிச்சாயம் பூசிக்கொள்வது வான்கோழி மயிலிறகுகளை ஒட்டிக் கொள்வதையே ஒக்கும்.
வரலாறு, அறிவியல், உளவியல் போன்ற சிறப்புத்துறைகள் பற்றிய கட்டுரைகளை அவ்வத்துறை வல்லுனர்களிடம் காட்டி வடிகட்டி விட்டு வெளியிடுதல் நலம். அன்றேல் பிறர் நம்மைப் பார்த்து நகைக்க ஏதுவாகும்.
அன்புள்ள,
Dr டி. ஆர். சுரேஷ்
மனநல மருத்துவர்,
1, மூன்றாவது தெரு,
K V காலனி, மேற்கு மாம்பலம், சென்னை- 600033
Ph: 9940354935
அன்புடையீர்!
வணக்கம்.
முனைவர் ஔவை அருள் அவர்களின் புதிய பதவியேற்புக்கு என் வாழ்த்துகள்.
08-05-22-ஆம் தேதியிட்ட தமிழ்மணியில் கால்டுவெல் பற்றி எழுதியுள்ள கட்டுரையைப் படித்து மகிழ்தேன். "கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி" என்னும் ஒளவை பாடலில் "வான்கோழி" என்னும் சொல் பயில்வதால் அப்பாடல் ஐரோப்பியர் இந்நாட்டுக்கு வணிகர்களாக வந்ததன் பின்னரே எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று கால்டுவெல் ஆராய்ந்து கூறினார் என்று அதிற் குறிப்பிடப்பட்டிருந்தது. "வான்கோழி" என்பதை ஐரோப்பியர் இந்நாட்டுக்குக் கொணர்ந்த "turkey bird" என்பதைக் குறிக்கவே இன்று பயன்படுத்துகின்றோம். அப்பொருளில் இக்கூற்று சரியாகவே தோன்றக்கூடியது.
ஆனால் "வான்" என்பதற்கு சென்னை பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதி தரும் பதின்மூன்று பொருள்களுள் "Greatness, largeness பெருமை" என்பதும் ஒன்று. அளவிலோ சிறப்பிலோ மிக்கு விளங்குவதைக் குறிக்கும் அடைமொழியாக "வான்" பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. "வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்னும் பாரதி கூற்றில் வான் என்னும் சொல் இப்பொருளில் வந்துள்ளது. காட்டுக்கோழி வீட்டுக்கோழியை விட அளவிற் பெரிதாக இருக்கக்கூடியது மட்டுமல்ல, வண்ணங்களும் கூடுதலாக உள்ளவை ஆகும். எனவே, காட்டுக்கோழி பெரிதாகவும் வண்ணங்கள் கொண்டதாகவும் இருப்பினும் வண்ணமயிலுக்கு இது ஈடாக முடியாது என்னும் பாடற்பொருள் எளிதில் விளங்குகின்றது. மறைந்த தமிழ்நூற்கடல் தி.வே. கோபாலய்யர் பாடலின் முதல் அடி "கான மயிலாடக் கண்டிருந்த கான் கோழி" என்றிருக்க வேண்டுமென்று கருத்துக் கூறியுள்ளார். இது நான் குறிப்பிட்ட பொருள் மாறாமல்
இருப்பதோடு மோனையழகையும் அமைந்துள்ளது. எப்படியும், "வான்" கோழியோ "கான்" கோழியோ, ஒளவை குறிப்பிடுவது இக்காலத்திய வான்கோழி என்னும் கால்டுவெல் கூற்று ஏற்புடைத்தன்று.
அன்புடன்
மரு. டி. ஆர். சுரேஷ்,
1, மூன்றாம் தெரு, கே.வி. காலனி, மேற்கு மாம்பலம், சென்னை-600033.
+919940354935
பின்குறிப்பு:
கலாரசிகன் கட்டுரையில் "ஆவடிக்குமார்" என்ற பெயர் கண்டேன். இது "ஆ + அடி+ குமார்" என்று பிரியும்; "பசுவின் கீழுள்ள குமார்" என்று பொருள் தரும். "ஆவடி குமார்" என்றால் "ஆவடியைச் சேர்ந்த குமார்" என்று பொருள்படும். மேலும், "குமார்" என்பது சமஸ்கிருதச் சொல். அது தமிழ்ச்சொல்லோடு சேரும் போது ஒற்று வாராது: "ஆதி பகவன்" என்பது போல.
| Wed, 27 Jul, 23:37 (13 days ago) | ![]() ![]() | ||
| ||||

Comments
Post a Comment