பொய்கள் பலவிதம்! ஆன்மீகம், "ஆகமம் - தமிழ்ச் சொற்களே!" என்னும் தமிழ்ப்பொய் ஒருவிதம்!
பொய்கள் பலவிதம்! ஆன்மீகம், "ஆகமம் - தமிழ்ச் சொற்களே!" என்னும் தமிழ்ப்பொய் ஒருவிதம்!
ஆன்மீகம், ஆகமம் - தமிழ்ச் சொற்களே! என்று 05-02-23ஆம் தேதியிட்ட தினமணியில் (தமிழ்மணி) ஒருவர் விரிவாக எழுதியிருந்தார். A beautiful theory killed by one ugly little fact என்று ஒரு நகைமொழி உண்டு. இக் கட்டுரை அதற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும்.
இதை மறுத்து நான் எழுதியதை 12.02.23 அன்று தமிழ்மணியில் வெளியிட்டனர். அது வருமாறு:
அன்புள்ள ஆசிரியருக்கு..
வலிந்து பொருள் கோடல்
கடந்த வாரம் (5-2-2023) வெளியான ஆன்மீகம், ஆகமம் - தமிழ்ச் சொற்களே!' கட்டுரை படித்தேன். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி ஆன்மா என்ற சொல்லை சம்ஸ்கிருதச் சொல்லாகவே குறிக்கிறது. ஆன்மீகம் என்ற சொல் அதில் இல்லை. ஆன்மிகம் என்பதே சரியான வடிவம். இவை சம்ஸ்கிரு தத்திலிருந்து தற்பவமாக வந்தவையே. இவை தனித்தமிழ் என்பதற்கான பழைய பயன்பாடு ஏதுமில்லை. கட்டுரையாளர் ஆகமத்தில் உள்ள ‘கமம்’ என்பதை ‘வருகை’ என்று குறிக்கிறார். வருகை என்னும் பொருளிலும் ஆகமம் சம்ஸ்கிருதச் சொல்லே என்கிறது அகராதி. ‘ஆ’ என்றால் உயிர் எனும் பொருள் அகராதியில் இல்லை. கட்டுரையாளரின் சொல்லாய்வு ‘வலிந்து பொருள் கோடலின் பாற்படும்' எனலாம்.
மரு. த.ரா. சுரேஷ், சென்னை.
என் கடிதத்தின் முழு வடிவம் வருமாறு:
அன்புடையீர்!
05.02.23 தேதியிட்ட தமிழ்மணியில் தெ முருகசாமி அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் "ஆன்மிகம், ஆகமம்" எனும் இரண்டு சொற்களும் தமிழ்ச்சொற்களே என்று கூறியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி ஆன்மா = *ஆன்மா āṉmā , n. ātman.(சமஸ்கிருதம்) Soul, self, spirit, as opp. to matter; உயிர். (திவா.) என்று தந்துள்ளது. ஆன்மீகம் என்ற சொல்லே அதிற் காணவில்லை. ஆன்மிகம் என்பதே சரியான வடிவம். அது வேறு அகராதிகளிற் காணப்படுகின்றது. இவை சமஸ்கிருதத்தினின்று தற்பவமாக வந்தவையாகும். இவை தனித்தமிழ்ச் சொற்களாயின் அதற்குச் சான்றாக பழைய பயன்பாடுகளை எடுத்துக்காட்டினால் நன்றியுடையேன்.
ஆகமம் என்பதை *ஆகமம் ākamam , n. < ā-gama. 1. Šāstras, scriptures, one of six piramāṇam, q.v.; வேதசாஸ்திரங்கள். (பிங்.) 2. Scriptures believed to be revealed by God and peculiar to Šaivism, Vaiṣṇavism, Šāktism or Jainism; முதல்வன் வாக்கு. (பிங்.) என்று கூறும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி அச்சொல் சமஸ்கிருத மூலம் உடைத்து என்று தெளிவாகவே குறிப்பிட்டுள்ளது. (பேரகராதி இட்டுள்ள உடுக்குறி சம்ஸ்கிருத மூலம் உடைய சொற்களைக் குறிப்பது!) முருகசாமி அவர்கள் ஆகமம் என்பதற்கு ஆ + கமம் = உயிர் + வருகை என்று கூறியுள்ளார். கமம் என்றால் வருகை என்னும் பொருளிலும் ஆகமம் என்பது சமஸ்கிருதச் சொல் என்று பேரகராதி கூறுகின்றது: ஆகமம் ākamam , n. < ā-gama. Coming; வருகை.
ஆ என்றால் உயிர் என்னும் பொருள் அதில் இல்லை. ஆன் என்றால் உயிர் என்று கட்டுரை ஆசிரியர் கூறுவதற்குப் பேரகராதியில் எச்சான்றும் இல்லை.
எனவே,இவர்தம் சொல்லாய்வு தமிழ்நூற்கடல் பண்டித தி.வே.கோபாலய்யர் அடிக்கடி கூறுவது போன்று "வலிந்து பொருள் கோடலின்பாற்படும்" என்றே தோன்றுகின்றது.
இவ்வாறு தமிழில் இல்லாதது என எதுவுமேயில்லை என்பதும் சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் பெற்றுக்கொண்ட சொற்களையும் தனித்தமிழ்ச்ச்சொற்கள் என்பதும் கடுமையான தாழ்வுமனப்பான்மையையே காட்டுகின்றது என்பதில் ஐயமில்லை.
Comments
Post a Comment