தனித்தமிழ் என்னும் கானல்நீர்!
திரு. வைகைச்செல்வன் பிறமொழி கலப்பின்றிப் பேசுவோம்! என்று தம் கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார் (தினமணி 02.03.23). ( பிறமொழிக் கலப்பின்றி என்றிருக்க வேண்டும். அது வேறு கதை!)
தமிழில் இணைச்சொல் இல்லாததால் பிற மொழிச்சொற்களைப் பயன்படுத்துவது ஒன்று. இணைச்சொற்கள் இருந்தாலும் பிறமொழிச்சொற்களைப் பயன்படுத்துவது மற்றொன்று. முதலாவது தவிர்க்க முடியாதது. மற்றது தவிர்க்கக்கூடியது. இவ்வ்விருவகையையுமே இவர் கட்டுரையில் காணமுடிகின்றது.
முதலாவது வகையினவாக இதில் வருவன இலக்கியம், இலக்கணம், உலகம், இதிகாசம், அமுது, பாடம் போன்றன.
இரண்டாவது வகையினவாக இதில் வருவன நாகரிகம், சுவாசப்பை, தேய்மானம், நகர்ப்புறம் போன்றன. இவற்றுக்குத் தமிழிலேயே முறையே பண்பாடு, மூச்சுப்பை, தேய்வு, பேரூர்ப்புறம் என்னும் தமிழ்ச்சொற்கள் உள.
இவற்றையே தவிர்க்கமுடியாத நிலையில், கட்டுரையாளரின் கூற்று நிறைவேறுவது எங்ஙனம்? எது தனித்தமிழ், எது இறக்குமதி என்பதை வேறுபடுத்த முடியாதவாறு பல்லாயிரம் சொற்கள் தமிழாகவே ஆகிவிட்டன என்பதை முதற்கண் உணரவேண்டும்.
இன்னொன்று. எழுத்து வடிவத்துக்கு ஏற்ற ஒலிப்பு முறை தமிழுக்குண்டு என்கின்றர் இவர். கற்பு - ஏற்றம் என்பதில் ற, அச்சு - பஞ்சு என்பதில் சு, பக்கம் - தங்கம் என்பதில் க, கப்பல் - இன்பம் என்பதில் ப ஆகிய எழுத்துகள் ஒரே ஒலிப்புமுறையையா கொண்டுள்ளன? இது போல் இன்னும் பற்பல காட்டவியலும்.
உணவு, உடை, பழக்கவழக்கங்கள் என்னும் பண்பாடுக்க்கூறுகள் அனைத்திலும் வேற்றுமொழி வழக்கத்தை எற்றுக்கொண்டுவிட்டுப் பேச்சிலும் எழுத்திலும் மட்டும் கலப்பு கூடாது என்பது ஆகாயத்தாமரை பறிப்பது போல் நகைப்புக்குரியது.
பிறமொழிகளைத் தாக்குவதை விடுத்துத் தமிழை நன்கு கற்றுப் பயன்படுத்த முயல்வது மேலும் பயன் தரும்.
தனித்தமிழ் என்பது இல்லாத ஊருக்கு வழிதேடுவதாகும்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
அன்புடன்
மரு. த.ரா. சுரேஷ்
தினமணி 09-03-23
வாசகர் கடிதம்
உணர வேண்டும்
தமிழில் இணைச்சொல் இல்லாததால் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துவது ஒன்று; இணைச் சொற்கள் இருந்தாலும் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துவது மற்றொன்று ('பிறமொழி கலப்பின்றிப் பேசுவோம்!' கட்டுரை, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், 2-3-2023). முதல் வகையினவாக இக்கட்டுரையில் வருவன: இலக்கியம், இலக்கணம், உலகம், இதிகாசம், அமுது போன்றவை. இரண்டாவது வகையினவாக வருவன: நாகரிகம், சுவாசப்பை, தேய்மானம், நகர்ப்புறம் போன்றன. இவற்றுக்குத் தமிழிலேயே முறையே, பண்பாடு, மூச்சுப்பை, தேய்வு, பேரூர்ப்புறம் ஆகிய தமிழ்ச்சொற்கள் உள. இவற்றையே தவிர்க்க முடியாதபோது கட்டுரையாளரின் கூற்று நிறைவேறுவது எங்ஙனம்? எது தனித்தமிழ், எது இறக்குமதி என்று வேறுபடுத்த முடியாதவாறு பல்லாயிரம் சொற்கள் தமிழாக ஆகிவிட்டன என்பதை நாம் உணர வேண்டும்.
த.ரா. சுரேஷ், சென்னை.
Comments
Post a Comment