அச்சமூட்டும் அயல்மாநிலத்தார் வெறுப்பு!

29.3.23 அன்று தினமணியில் வெளியான சுப. உதயகுமார் என்பவர் எழுதிய “அச்சமூட்டும் அந்நியர் குடியேற்றம்” என்னும் நடுப்பக்கக் கட்டுரைக்கு என் கடிதத்தின் முழு வடிவம்.

அன்புடையீர்!

வணக்கம்.
"அச்சமூட்டும் அந்நியர் குடியேற்றம்!" என்னும் நடுப்பக்கக் கட்டுரை கண்டு மிக்கு வருந்தினேன். அக் கட்டுரை நச்சுக் கொள்கை நிரம்பிய பொய்கை. "எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்திய மக்கள்" என்று பறையறைந்து "பாரத சமுதாயம் வாழ்கவே!" என்று பாடிய பாரதி கனவிலும் கருதியிருக்க முடியாத இழிநிலையை இன்று நாம் எய்திவிட்டோம். "அந்நியர்" என்னும் சொல் வெள்ளையரை மட்டுமே குறித்த காலம் மாறி நம் நாட்டு மக்களில் சிலரையும் குறிக்கும் கேடுகாலம் இது! "வட மாநிலத்தார்" என்னாது "வட நாட்டார்" என்று கூறுவது ஆசிரியரின் பிரிவினை மனப்பான்மையையே வெளிப்படுத்துகின்றது.
"வேலைக்குக் கிடைப்பதில்லை; கிடைத்தாலும் ஒழுங்காக வருவதில்லை; வந்தாலும் ஒழுங்காக வேலை செய்வதில்லை; செய்தாலும் இடைநிறுத்தம் பல; காசு கிடைத்ததும் குடிக்கப் போய்விடுகின்றனர்" என்பன தொழில் முனைவோர் தமிழ்நாட்டினரைப் பற்றிக் கூறும் குற்றங்களிற் சில மட்டுமே. தமிழர் வேலைக்குப் போதிய எண்ணிக்கையிலும் தரத்திலும் கிடைத்தால் பிற மாநிலத்தவர் இங்கு வர இடமேது? இவர்கள் காலி செய்த வெற்றிடம் மற்றவர்களை இழுப்பது இயற்கைவிதியன்றோ?
1960களில் மகாராஷ்டிரத்தில் தென்னிந்தியாரை, அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டாரை "வந்தேறிகள்" என்றும் "உள்ளூர் மக்களின் வேலைகளையும் செல்வத்தையும் அபகரிப்போர்" என்றும் சிவசேனா தலைவர் பால் தாக்கரே இயக்கம் நடத்தியபோது அதைத் தவறென்று நம்மவர்கள் அலறினார்களே! இப்போது ஏன் நியாயம் மாறுகின்றது?
உலகெங்கும் தமிழர் உள்ளிட்ட இந்திய வழியினர் உயர்பதவிகளிலும் ஆட்சிநிலைகளிலும் இருப்பதைப் பெருமையாகக் கொண்டாடும் நாம் மற்றவர்கள் இங்கு வந்தால் "பால் மாறுவது" ஏன்?
"வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்" என்பது பண்டைய சரித்திரம் போலும்! "வந்தாரை விரட்டும் தமிழகம்" என்பது இன்றைய நிதர்சனம் போலும்! 
இப் போக்குக்கு தினமணி இடங்கொடுப்பது மிகவும் வருந்தத்தக்கது.
அன்புடன்,
மரு. த.ரா. சுரேஷ், 1/1, மூன்றாவது தெரு, KV காலனி, மேற்கு மாம்பலம், சென்னை - 600033 9940354935

Comments

Popular posts from this blog

A Piece From Shakespeare's Macbeth. ஸேக்ஷ்பியரின் ம-க்பெத் நாடகத்திலிருந்து ஒரு கீற்று.

தமிழ்ச்சொற்களுக்குப் புதிய ஆங்கில இணைச்சொற்கள் - சில கருத்துகள்

Why Gandhi Lost the Duel with Jinnah