ஆபாசம் மாறும் காலங்கள் தோறும், ஆனாலும் கோணல் மாறாது எந்நாளும்!
ஆபாசம் மாறும் காலங்கள் தோறும்,
ஆனாலும் கோணல் மாறாது எந்நாளும்!டி.ஆர். சுரேஷ்
கோவில்களில் காணப்படும் சிலைகளை ஆபாசக் கண் கொண்டு நோக்கிப் பழித்துரைக்கும் இழிந்த பண்பு சென்ற நூற்றாண்டிலிருந்தே ஆங்காங்கே காணப்படுகிகின்றது. இதிலும் தமிழகம் முன்னோடியாகவே நிற்கின்றது. கம்பராமாயணம் போன்ற காப்பியங்களில் வரும் அங்கவர்ணனைகளையும் இவ்வாறே மாறுகண் கொண்டு கூறுவோர் சிலரிருந்தனர். (மற்ற காப்பியங்கள், சங்க இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் ஆகியவற்றைக் குறைகூற இவர்கள் துணிந்ததேயில்லை என்பது வேறு விஷயம்.) இக்காலம் இரண்டாம் கோளாறு அவ்வளவாகக் காணப்படுவதில்லை. ஆனால் முதல் கோளாறு மீள்நோய் போன்று அவ்வப்போது வருகின்றது.
இந்த மேதாவிகள் M F ஹுஸைன் போன்றோர் தெய்விக உருவங்களைத் தீட்டிய ஆடையற்ற அல்லது ஆடைகுலைந்த ஓவியங்கள் கலையின் உச்சம் என்று துதிபாடுவார்கள். எவரேனும் அவற்றை எதிர்த்தால் அவர்களைப் இந்து வெறியர்கள் என்று வசைபாடவும் செய்வார்கள். தற்காலம் வாழ்ந்து மறைந்த ஒருவருக்கு இவர்கள் நீட்டும் கலைச்சுதந்திரம் ஆயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த சிற்பிகளுக்கும் உண்டென்பது இவர்தம் மூளைக்கு அப்பாற்பட்டதாகவே விளங்குகின்றது.
தருமம் இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம், சூழ்நிலைக்குச் சூழ்நிலை மாறியமைவது என்பது தருமபுத்திரன் வாக்கு. இக்காலம் சங்கடமூட்டும் செயல்களை முற்காலத்தவர் மேற்கொண்டார்க ளென்றால் அக்காலம் அவை தவறாகக் கருதப்படவில்லை என்பதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நான் சிறுவனாக இருந்த போது சாதாரணமாகக் கருதப்பட்ட புகைப்பழக்கம் இந்நாளில் மிகதீங்கானதாக வெறுக்கப்படுகின்றது. பரவலாக அன்று காணப்பட்ட பலதார மணம் இன்று சட்டப்படிக் குற்றம் என்றாகி யுள்ளது.
ஆனால் உருவச்சித்திரிப்பிலும் வருணனையிலும் பண்டைய வழங்கங்கள் இன்று ஆபாசமாகக் கருதப்படும் நிலை வந்தது எங்ஙனம்? முதலில் இவற்றை அவ்வாறு நோக்குவது இஸ்லாமியர்களின் படையெடுப்பில் தொடங்கியது. ஆயினும் அவர்கள் இதனுள் நேரடியாக நுழையவோ இவற்றையும் இம்மக்களையும் பழிக்கவோ பெரிதும் தலைப்படவில்லை.
இப்பிரச்சினை பெரிதானது வெள்ளையர் வந்த பின்னரே. ஆபாசம் குறித்து மிகவும் அலட்டிக் கொள்ளாத வெள்ளையர் மனப்பாங்கு விக்டோரியா மகாராணி காலத்தில் மிக்கு வளர்ந்தது. அப்போது இங்கிலாந்திலும் ஒழுக்க வரையறைகள் இறுக்கம் மிக்கனவாக மாறின. புதிதாகத் தாம் மேற்கொண்ட குறுகிய மதிப்பியல்களை அவ்வெள்ளையர் தாம் சென்ற இடங்களிலும் அமல்படுத்தினர். அவர்கள் போதித்ததை நம்மவர்கள் அப்படியே மேற்கொண்டனர்.
இன்று வெள்ளையர்கள் இவ்விஷயங்களில் பெரிதும் மாறிவிட்டனர். ஆயின் நம்மவர்கள் அவர்களுடைய பழைய பாடத்தையே இன்றும் பயின்று வருகின்றனர். இளைய தலைமுறையினரிடையே இதுவும் மாறி வருகின்றது. இன்று நடுத்தர வயதினர் அணியும் ஆடைகளை இருபதே ஆண்டுகளுக்கு முன்னர்கூட கூசச் செய்யும் ஆபாசம் என்று பத்தாண்டுகளுக்கு முன்கூட சமுதாயம் பழித்து வந்த ஆபாச நடனம் என்று திரைப்படங்களில் வந்ததை இன்று கதாநாயகிகளே ஆடுகின்றனர். ஆபாச நடனக்காரர்களுக்கு வேலையே இல்லாமற் போய்விட்டது. இழிதொழில் என்று ஒதுக்கப்பட்ட விபச்சாரம் இன்று பாலியல் தொழில் என்று மதிப்புக் கூட்டப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் கொலையைக்கூட நியாயப்படுத்திய கள்ளக்காதல் இன்று சட்டபூர்வமான அங்கீகாரம் பெற்று வருகிகின்றது. வெள்ளையர்கள் இதில் ஏறத்தாழ முற்றுமாக மாறிவிட்டனர்.
இடைக்காலத்தில் இலக்கியத்தில் எழுதக் கூசிய உறுப்புப்பெயர்களை உரத்து எழுதுவதே பெண்ணுரிமைக் கவிதாயினிகளின் வீரச்சின்னமாக இன்று புகழப்படுகின்றது.
பண்டைத்தமிழர் வாழ்வில் மகிழ்ச்சி, கொண்டாட்டம், விருந்தோம்பல் என்பன கள்ளைப் பெரிதும் கொண்டிருந்தன. இன்று குடிப்பழக்கம் தீதென்றே சமுதாயம் (வெளிக்காவது!) கூறுகின்றது. மாமிச உணவே பெருவழக்காக இறந்தகாலம் இடையில் பலர் தாவர உணவுண்பதாக மாறி இன்று மாமிச உணவு சுற்றுப்புறச் சூழ்நிலைக்குத் தீங்கு விளைபதென்று கூறும் நவீன காலமும் வந்துள்ளது.
ஒழுக்கம், ஆபாசம் பற்றிய சமூக மதிப்பியல்கள் நம் கண்முன்னேயே மாறிக்கொண்டு வருகையில் ஆயிரமாண்டுக்கு முந்திய சிற்பங்களை நம் அளவுகோல்களைக் கொண்டு மதிப்பிடுவது அறிவுடைமையாகாது.
கோவில் சிலைகளில் ஆபாசம் காண்கின்றவர் பண்டைய தமிழர் அனைவரையும் ஒழுக்கமற்ற போக்குள்ளவர் என்று சாடுகின்றார் என்பதைத் தமிழ்மானம் காக்க எப்போதும் முன்னிற்கும் போராளிகள் கவனிப்பார்கள் என்பது சந்தேகம்தான். தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்றதையே பெரிய மனத்துடன் பொறுத்துக் கொண்டவர்கள் அவர்கள் அல்லவா?
வெள்ளத்தோலை வழிபட நமக்குக் கற்றுக் கொடுத்ததும் வெள்ளையர்கள்தாம். நம்மவர் வெள்ளைத்தோலை எள்ளிநகையாடிய காலம் முன்னம் இருந்ததுண்டு. திருமால், கண்ணன், இராமன், திரௌபதி, இராவணன், விபீஷணன் போன்று எண்ணற்றவர் கருநிறத்தவர், பேரழகு படைத்தவர் என்று நம் இதிகாலங்களும் இலக்கியங்களும் போற்றுகின்றன. ஒழுக்கநெறி மதிப்பியல்கள் விஷயத்தில் ஆனதைப் போன்றே மேனிநிற விஷயத்திலும் ஆயிற்று. ஆட்சிபீடம் ஏறியவர்கள் ஏற்றுக்கொண்டதே உயர்ந்த தென்றாயிற்று. மேலைநாடுகளில் வெள்ளைத்தோல் வழிபாடு பெரிதும் அருகிவருகின்றது. நம்நாட்டிலோ வெள்ளைநிற வெறி ஓயவேயில்லை.
Comments
Post a Comment