மொழி என்பது பாஷை அன்று; ஆணை!
வணக்கம்.
“குமரி முதல் வட இமயத்து ஒரு மொழி” என்னும் நடுப்பக்கக் கட்டுரையைக் கண்டேன் (தினமணி 12.07.23) தலைப்பிலேயே பொருட்திரிபு உள்ளது. அதை இறுதியிற் கூறுகின்றேன்.
உலகம் முழுதும் இன்றியமையாததும் அதிகம் அறியப்பட்டதும் ஆங்கில மொழியே என்பதில் ஐயம் எதுவுமில்லை. உலக மொழிகளில் மிக அதிக சொற்களைக் கொண்டதும் ஆங்கிலமே. ஆனால் ஆங்கிலேயர் “எங்கள் மொழிதான் உலகிலேயே பெரிய மொழி!” என்று பெருமையடித்துக்கொள்வதை எங்கும் நாம் காண்பதில்லை. தமிழரிடையே மட்டுந்தான் இந்த நான்தான் பெரியவன் என்று பெருமையடித்துக்கொள்ளும் “பண்பு” புரையோடிக் கிடக்கின்றது. இதன் அடிப்படை நம் தாழ்வு மனப்பான்மை என்பதா? அந்தப் போக்கில் எழுந்ததாகவே இக்கட்டுரை காண்கின்றது.
கட்டுரையிற் பல கருத்துகளும் தடைகூறத்தக்கனவாகவே உள. சிலவற்றை மட்டுமே இங்குக் கூறுகின்றேன்.
“தமிழர் இந்தியா முழுதும் பரவியிருந்தனர். பிறகு அவர்கள் தென்னிந்தியாவுக்குத் தள்ளப்பட்டனர்” என்கின்றார் கட்டுரையாளர். யார் தள்ளினார்கள்? அவ்வாறாயின் அங்கெல்லாம் தமிழர் வாழ்ந்ததாக வரலாறோ எச்சங்களோ பிற தொன்மங்களோ ஏனில்லை? தென்னகத்தில் பரவலாகக் காணப்படும் கல்வெட்டுகள் எதுவுமே வடநாடு தமிழருக்கு வாழ்விடமாக இருந்ததாக எங்கும் குறிப்பிடவில்லையே!
“ஊர் என்பதோடு ப் சேர்ந்தால் “பூர்” என்றாகும் என்கின்றார் கட்டுரையாளர். அதையே ஜெய்ப்பூர் முதலிய ஊர்ப்பெயர்களுக்கு மூலமாக அவர் காட்டுகின்றார். தமிழ்ப் பேரகராதி உள்பட நம் நாட்டு அகராதிகளோடு வெளிநாட்டு அகராதிகளும் “புர” என்னும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்தே “பூர்” என்னும் இந்தி ஊர்ப்பெயர் முடிவு தோன்றியது என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன.
சியால்கோட் பதான்கோட் என்னும் ஊர்ப்பெயர்கள் கோட்டை என்பதை முடிவில் கொண்டுள்ளன என்கின்றார் கட்டுரையாளர். அதற்கான மறுப்பு விவரங்களைக் கீழே தந்துள்ளேன்:
Sialkot is a city located in the Punjab province of Pakistan. The name "Sialkot" has historical and linguistic origins. It is believed to have been derived from the Sanskrit words "Shiyal" and "Kot," which mean "territory of jackals" or "land of foxes."
Pathankot - the name in Mughal times was Paithan, an abbreviation of Pratishthana, meaning, “the firmly established place.” ( History of Punjab Hill States – J Hutchison and J.
பானிபட், சோனிபட் என்னும் ஊர்ப்பெயரில் பட்டி உள்ளதென்கிறார். அதன் மறுப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு:
Panipat - Wiktionary- Etymology. Borrowed from Hindi पानीपत (pānīpat), from Sauraseni Prakrit 𑀧𑀡𑁆𑀡𑀧𑀢𑁆𑀢 (paṇṇapatta) or 𑀧𑀦𑁆𑀦𑀧𑀢𑁆𑀢 (pannapatta), from Sanskrit पाण्डुप्रस्थ (pāṇḍuprastha, “City of Pāṇḍu”), from पाण्डु (pāṇḍu, “A character from the Mahabharata”) and प्रस्थ (prastha, “city”).
Sonipat name is derived from the word Sonpat which means in Sanskrit language the suvarna prastha (gold place). One popular tradition avers that it is one of the five patas or prasthas (Indraprastha, Panipat, Talpat, Bhaghpat and Sonipat) mentioned in the Mahabharata which Yudhishthira demanded from Duryodhana.
படவெழுத்துக்கள் சிந்துவெளி நாகரிகத்தில் இருந்தன. தமிழ்நாட்டிலும் அவை கிடைத்துள்ளன. ஆகவே அங்கும் தமிழரே இருந்தனர் என்கின்றார் கட்டுரையாளர். அப்பிடியானால் அவ்வெழுத்துக்கள் எப்போது தமிழிலிருந்து மறைந்தன? கிரேக்க, இலத்தீன் எழுத்துக்கள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளனவே. அப்படியானால் அந்நாடுகளிலும் தமிழரே வாழ்ந்தனர் என்றும் கூறுவார் போலும்! விடும் கதையைப் பெரிதாகவே விடலாமே!
இந்த அம்மா என்னும் சொல்லைக் கொண்டு நம் “தமிழறிஞர்கள்” படுத்தும் பாடு சாத்தானுக்கே பொறுக்காது! தொன்றுதொட்டு உலகம் முழுதும் மா அல்லது அது போன்ற ஒலிப்புடைய சொற்கள் தாயைப் பெரும்பாலும் குறித்துவருகின்றன. ஏதோ இங்கிருந்துதான் அச்சொல் பிற நாட்டவருக்குப் பரவியது என்பதை அறிவீனம் என்பதா, அகங்காரம் என்பதா?
சங்கத்தமிழில் பெரிதும் குறிக்கப்படுவர் முருகனும் பலராமனும் திருமாலுமே. சிலப்பதிகாரத்தில்தான் சிவன் சிறப்பிக்கப்படுகின்றான். நம்மிடமிருந்துதான் சிவனை வடநாட்டவர் பெற்றனர் என்றால், ஏன் அதைவிட அதிகமாக அவர்கள் முருகனைக் கொண்டாடவில்லை?
பாம்பு வழிபாடு உலகம் முழுதும் பண்டுதொட்டு வழங்குவது. அதைத் தமிழரின் தனிக்கண்டுபிடிப்பு என்கின்றார் இவர்!
“சந்தனம்” என்னும் சொல் “சந்தன” என்னும் சம்ஸ்கிருதச் சொல்லிலிருந்து வந்தது என்கின்றது தமிழ்ப்பேரகராதி, இவர் அதைத் தமிழ்ச்சொல் என்கின்றார்! “சங்கு” என்பதும் சம்ஸ்கிருத வேர் உடையதே.சங்கசக்கரம் என்னும் இணைச்சொல் இதைத் தெளிவாகக் காட்டுகின்றது. இப்படியே தமிழில் வழங்கும் பிறமொழிச்சொற்கள் யாவும் தமிழில் பிறந்தவையே என்று முடித்துவிட்டால் மிகவும் வசதியாகப் போய்விடும்!
இறுதியாக, கட்டுரைத்தலைப்பில் உள்ள திரிபொருள்:
“குமரியொடு வட இமயத்து ஒரு மொழி வைத்து உலகாண்ட சேரலாதற்கு” என்னும் சிலப்பதிகாரச் சொற்களைக் கொண்டு இந்தியா முழுதும் தமிழே நிலவியதென்கின்றார் கட்டுரையாளர். ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் வரைந்த சிலப்பதிகார உரையில் இதன் பொருள் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “தெற்கண் குமரியும் வடக்கண் இமயமுமாகிய அவ்விரண்ட னிடைப்பட்ட உலகினைத் தன் ஆணை யானே ஆண்ட சேரலாதனுக்கு” என்பது இதன் பொருள். “மொழி” என்பது “ஆணை” என்று இவ்விடத்தில் பொருள் கூறப்பட்டுள்ளது. அதை “பாஷை” என்கின்றார் கட்டுரையாளர்! இவ்வாறு தன் வாதத்துக்கு ஏற்ப ஒன்றன் உண்மைப் பொருளை மாற்றிக்கூறுவதை “வலிந்து பொருள் கோடல்” என்பார் தமிழ்க்கடல் தி.வே. கோபாலய்யர்!
உலகில் பல்வேறு நாடுகளில் பணியாட்களாக தமிழர் கொடுமைக்காளாகும் நிலையை எண்ணி வருந்தி ’விதியே விதியே தமிழ்ச்சாதியை என் செய்ய நினைத்தாய் எனக் குரையாயோ' எனப் புலம்பினார் பாரதியார்.
தமிழைத் தாறுமாறாக இவ்வாறு தூக்கிப் பிடிக்கும் இக்காலத்தாரைக் காண நேர்ந்தால் அவர் மீண்டும் நொந்து இதையே சொல்வார்!
இக்கடிதத்தின் நீட்சிக்கு மன்னியுங்கள். என் மனத்தாங்கலைத் தங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இதை எழுதினேன்.
அன்புடன்,
மரு. த.ரா. சுரேஷ், 1, மூன்றாவது தெரு, மேற்கு மாம்பலம், சென்னை - 600033. 9940354935
Comments
Post a Comment