மனமார்ந்த தீயமுன்நோக்கம் --- அறம்நிலையாத்துறையால் அடுத்த கேடு!
மனமார்ந்த தீயமுன்நோக்கம்
அறம்நிலையாத்துறையால் அடுத்த கேடு!
குற்றவியல் சட்டத்தில் “மனமார்ந்த தீயமுன்நோக்கம்” என்பது தகுந்த காரணமோ மீறமுடியாத தூண்டுதலோ இன்றி ஒரு குற்றத்தைச் செய்யும் மனநிலையாகும். “அது வெறுமனே பகையுணர்ச்சியோ வன்மமோ மட்டுமன்று. பொதுவாக அஃது ஒரு கொடிய, இழிந்த, பொல்லாங்கு நிறைந்த ஓர் உள்ளத்தின் தீய திட்டமாகும்: தீங்குசெய்யும் மனப்பாங்கு. அது வெளிப்படையாகவும் இருக்கலாம், குறிப்பாகவும் இருக்கலாம்” என்று சட்ட நுன்னுரைகளிற் தலைசிறந்தவரான ப்ளாக்ஸ்டோன் என்னும் ஆங்கிலேய நீதிபதி இங்கிலாந்து நாட்டுச் சட்டக் குறிப்புரைகள் (Commentaries on the Laws of England, The Clarendon Press, Oxford, 1765 -1769) என்னும் தம் நூலிற் கூறியுள்ளார்.
எனவே, ஒரு குற்றத்தைச் செய்பவன் அதன் விளைவு இன்னதாக இருக்குமென்றும் அது தீயதென்றும் அறிந்திருந்தும் அக்குற்றத்தைச் செய்தானானால் அவன் மனமார்ந்த தீயமுன்நோக்கம் கொண்டிருந்தான் என்று கொள்ளத்தகும். அச்செயல் தீங்குவிளைக்குமென்று அவனுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமென்றாலும் இது பொருந்தும்.
இவ்வாறாக, பிரேக் பிடிக்காத ஒரு காரை எடுத்துக்கொண்டு ஒருவன் பொதுச்சாலையில் வேகமாகச் சென்று விபத்து ஏற்பட்டு ஒருவரைக் கொன்றுவிட்டால் அது குற்றத்தன்மையுள்ள கருத்தின்மை (criminal negligence) எனப்படும். ஒருவர் இறக்கவேண்டுமென்பதற்காகவே அந்தக் காரை அவரிடம் ஓட்டக் கொடுத்தனுப்பினால் அது மனமார்ந்த தீயமுன்நோக்கம் என்றாகும்.
பிணியாளர் ஒருவரின் ஒவ்வாமை விவரத்தை விசாரிக்காமல் அவருக்குப் பெனிசிலின் ஊசி போட்டு அவர் அதனால் இறந்தால் அது குற்றத்தன்மையுள்ள கருத்தின்மையாகும். அவருடைய ஒவ்வாமையை நன்கு அறிந்து அவர் இறக்கவேண்டுமென்பதற்காக அந்த ஊசியை அவருக்குச் செலுத்தினால் அது மனமார்ந்த தீயமுன்நோக்கம் என்றாகும்.
பழைய கட்டடம் ஒன்றை அடுத்துள்ள மனையில் பெரிய கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்காக கட்டிட அடிப்படைதாங்கும் நீண்ட பதிகால் தறிகளை அடித்திறக்கும் போது (pile foundation) முன்சொன்ன பழைய கட்டடம் இடிந்து விழுந்தால் அது குற்றத்தன்மையுள்ள கருத்தின்மையாகும். இந்த ஆபத்தை நன்கு முன்னறிந்திருக்க வேண்டிய ஒருவர் இதைச் செய்தாரானால் அதில் மனமார்ந்த தீயமுன்நோக்கம் உள்ளதாகக் கருதவும் இடமுண்டு.
தென்னிந்தியக் கோயிற் கோபுரங்களின் கட்டுமானத்தில் கண்ணுக்குத் தெரியாத உலக அதிசயமொன்றுள்ளது. ஐந்தே அடி அஸ்திவாரத்தின் மீது நூறடிக்கும் மேலான பெருங் கோபுரங்கள் இங்குள்ள கோவில்களில் எழுப்பப்பட்டுள்ளன. பூகம்பம் நேர்ந்தாலும் கோபுரம் இடிந்துவிழாமலிருக்க இது உதவுகின்றது. தஞ்சை பெரியகோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் போன்ற இடங்களில் இந்நிலை உள்ளது.
நம் முன்னோர்கள் வேறெங்குமில்லாத அதிசய முறையில் கோயிற் கோபுரங்களைக் கட்டும்போது பூகம்பத்திலிருந்து அவற்றைப் பாதுகாப்பதில் வெற்றிகண்டனர். ஆனால் கோபுரங்களுக்கு ஆபத்து மனிதச்செயல்களால் வருமென்று அவர்கள் கனவுகூடக் கண்டிருக்கமாட்டார்கள். இப்போது அதுதான் நடக்கின்றது.
திருவண்ணாமலை கோவில் ராஜகோபுரத்தின் முன்னே பல்மாடி வணிகவளாகம் கட்டும் இந்து சமய அறம்நில்லாத் துறையினர்தாம் இதில் ஈடுபட்டுள்ளனர். அந்த இடத்தில் இவ்வாறு கட்டடம் எழுப்புவது பெருங்குற்றம் என்பது ஒருபுறமிருக்க, இக் கட்டடத்தை எழுப்பும் வேலையால் கோயில் ராஜகோபுரம் தன் திடநிலை கெட்டு விழும் ஆபத்து உள்ளது என்பது கண்கூடு. இந்த அடிப்படை விஷயம் பற்பல வல்லுநர்களையும் ஸ்தபதிகளையும் கொண்டுள்ள இத்துறைக்கு தெரியாமல் இருக்கமுடியுமா? அதைக்கூட ஆராயாமல் இதில் இறங்குகின்றார்கள் என்றால் அது அது குற்றத்தன்மையுள்ள கருத்தின்மையாகும். இந்த விஷயம் தெரியாதென்றால் அவர்கள் தாம் பார்க்கும் வேலைகளுக்கு அடிப்படைத் தகுதிகளும் அற்றவர்கள் ஆவார்கள். தெரிந்தே இவ்வாறு செய்கின்றார்கள் என்றால் இதில் அவர்களுக்கு மனமார்ந்த தீயமுன்நோக்கம் உள்ளதாகக் கருத நிச்சயம் இடமுண்டு. சனாதன தருமத்தை அழிக்கவேண்டுமென்று கொக்கரிக்கும் ஒருவரின் தலைமையில் செயல்படும் இத்துறையின் உள்நோக்கம் பற்றி ஐயம்கொள்வதில் என்ன தவறு?
குறைந்தபட்சம் மடமை, அதிகபட்சம் கயமை!
Comments
Post a Comment