வெண்ணெய்நல்லூர்ப் பெருமுனி என்னும் பித்தன் வழக்கு

வெண்ணெய்நல்லூர்ப் பெருமுனி 

என்னும் 

   பித்தன் வழக்கு

சுந்தரமூர்த்தி நாயனாரைச் சிவபெருமான் தடுத்தாட்கொண்ட வரலாறு - 

நீதிமன்ற நோக்கில் 


தம்பிரான் தோழராம் சுந்தரமூர்த்தி நாயனார் சடங்கவி சிவாசாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள உள்ளார். அவர்களின் கல்யாணத்துக்கு மிக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆணழகனாகிய சுந்தரர் சடங்குமுறையான நல்லாடைகளைப் பொருத்தமாக அணிந்துகொண்டு வைதிக மாட்சியில் ராஜகளையுடன் பிரகாசிக்கின்றார். எழிலார்ந்த மணமகள் நற்குணங்களின் தலைநிலை உறைவிடமாக உள்ளாள். புரோகிதர்கள் குழுமியுள்ளனர். திருமண விருந்தினர் அனைவரும் திரண்டுள்ளனர். மகிழ்ச்சி கரைபுரண்டோடும் நேரம் அது. மங்கலச்சடங்குகள் தொடங்கவுள்ளன. 

அப்போது, போற்றுதற்குரிய பழுத்த வயோதிக அந்தணர் ஒருவர் திடீரென்று தூரத்தில் தென்பட்டார். அவர் வயதால் முதுகுவளைந்து போனவர். நடப்பதற்கு உதவியாக அவரிடமோர் ஊன்றுகோல் இருக்கின்றது. அவர் கோணல்மாணலாக வருகின்றார். ஆனால் அவர் மிகவும் அவசரத்திலுள்ளது போல் தோன்றுகின்றது. முதுமையே அவருடைய கவினார்ந்த வடிவில் கால்கொண்டு வருவதுபோன்று தோன்றுகின்றது. போற்றுதற்குரிய அம் முனி விழாக்கோலம் பூண்டுள்ள அவ் இல்லத்தினுள் நுழைகின்றார். அவர் முறைநடையையோ மற்றவர்களையோ மதிப்பவராகத் தெரியவில்லை. உரத்த குரலில் அவர் முழங்கத்தொடங்குகின்றார்: “இங்கே உள்ள அனைவரும் நான் கூறுவதைக் கேளுங்கள்!”. இப்போது அனைவரின் விழிகளும் அவர் மீது பதிந்துள்ளன.

அக்கூட்டத்திலிருந்த முதியவர்கள் அவரை வரவேற்கும்பொருட்டு விரைந்து செல்கின்றனர். அவருடைய வருகையின் நோக்கத்தை உரைக்குமாறு அவரை அவர்கள் உரிய மரியாதையுடன் வேண்டிக்கொள்கின்றனர். 

அம் முதியவர் கண்களில் கணநேர விஷமக்குறிப்புடன் மணமகனை நோக்கித் தம் சுட்டுவிரலை நீட்டித் தம் தொண்டையைக் கனைத்துக்கொண்டு பெருங்குரலிற் கூறுகின்றார்: ஓர் ஒப்பந்தத்திலிருந்து எழும் வழக்கொன்று பண்டுதொட்டு நமக்கிடையே உள்ளது. அதைத் தீர்த்த பிறகு உன் திருமணத்தை நீ நடத்த முயலலாம். “ அவ் வழக்கு தீரும் வரை தம் திருமணம் நிகழாதென்று சுந்தரர் அவருக்கு உறுதிகூறுகின்றார். இவ்வாறு உறுதிகூறப்பட்டதும் அவ் வயோதிகர் தம் முறையீட்டை முன்வைக்கின்றார். அவர் அதைக் கூறுவது இவ்வாறு: “அந்தணர்களே! என் முறையீட்டுக்குத் தீர்ப்புரையுங்கள்! நான் சாற்றுவது இதுவே: நாவலூரைச் சேர்ந்த இந்த ஊரன் என் அடிமையாவான். இதுவே என் வழக்கு!”

கூடியிருந்தோரிடையே குழப்பமும் கொந்தளிப்பும் உண்டானது. ”இம்முதுமறையவர் எண்ணுவதுதான் யாது?” என்று சிலர் யோசிக்கின்றனர். சிலர் சினம்மிக்கு வெகுண்டுள்ளனர். மிகப்பலர் நகைக்கத் தலைப்படுகின்றனர். கூட்டத்தின் ஒரு பகுதியினரிடம் ஆரவாரமும் பெருஞ்சிரிப்பும் எழுகின்றன. சுந்தரர் திகைத்துத் தடுமாறுகின்றார். ஆனால் அவர் கடிது தன்னிலையெய்தி அம்முதியவரைக் கேலிசெய்ய முற்படுகின்றார். “இம்மறையவர் சொல்வது மிகவுமே நன்றாகவுள்ளது!” என்று அவர் ஆர்த்துரைக்கின்றார். அவரால் தம் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

முதியவர் இடிபோன்று முழங்கும் குரலில் “அடே! ஏன் நகைக்கின்றாய் நீ?” என்று உறுமுகின்றார். “இதோ காண் ! முன்னாளில் உன் பாட்டனே எழுதித்தந்த இவ் ஓலையை, உன் அடிமைநிலைக்கு முறைப்படியான ஆவணத்தை! நிறுத்து உன் சிரிப்பை!”

போற்றுதற்குரியவரின் சொற்கள் மணமன்றத்தில் அதிர்ந்தொலிக்கத் தொடங்குகின்றன. மேலோர் உடன்குழுமியுள்ள நேரத்தில் மணமகனாம் இளைஞன் வெளிப்படையாக அவமதிக்கப்பட்டுள்ளான். அவன் நகைப்பு மறைகின்றது. குறிபார்த்து எய்யப்பட்ட கிழவரின் சொல்லம்புகளால் அவனைக் கடுமையாகப் புண்படுத்திவிட்டன. ஆயினும் அப் புதியவரை மேலும் சீண்ட அவன் துணியவில்லை. புதிதாக வந்தவர் வம்புசெய்வதில் குறியாகவுள்ளார். மணமகன் அறிந்திருப்பதற்கு மேலும் அவர் தந்தனங்களும் இனம்புரியா ஜாலங்களும் கைவசம் வைத்திருக்கக்கூடும். எனவே சுந்தரர் பொறுமையும் நிதானமுமே தமக்கு நலஞ்செய்யுமென்று உளங்கொள்கின்றார். இரையும் கிழவர் பைத்தியக்கார மனைக்கே உரியவர் என்று கருதின்றார் அவர். “அந்தணருக்கு அந்தணர் அடிமையாதல் என்பதை இன்று உன்னிடம்தான் கேட்டோம்! நீர் பொறிகலங்கிய பித்தனோ? என்று அவர் அக்கிழவரைக் கடுமையாகக் கடாவினார்.

நெடியகாலத்தவரிடமிருந்து விடை மறுகணமே வருகின்றது. “நான் பித்தனாகவே இருக்கட்டும்; அல்லது பேயனாகவும் இருக்கட்டும். அதனால் உனக்குப் பயன் யாது? ஏளனமும் தீயனவுமாக யாது நீ உரைக்கினும் அவற்றால் நாணமுற்று என் நோக்கத்தை நான் கைவிடுவேன் அல்லேன்! என்னை நீ யாரென்று எண்ணுகின்றாய்? நீ என்னை அறிவாயோ? என் அடிமையே! கெட்டித்தனமாகப் பேச வேண்டா! யான் இடும் பணியைச் செய்!”


சுரணையற்ற அக்கிழவரிடம் வாதிடுவதிற் பயனில்லையென்றும் இவ் எதிர்பாரா இடையூறைக் கடப்பதற்குச் சிறந்த வழி இவ் வல்லடிவழக்கை / அழிவழக்கை நிரூபிக்குமாறு அவரை அறைகூவுவதேயாகுமென்றும் சுந்தரர் முடிவுக்கு வருகின்றார். இவ்வாறு எண்ணிக்கொண்டு கொதிக்கின்ற, முடுகுகின்ற, கூரிய சொற்களை அவரை நோக்கி வீசுகின்றார் சுந்தரர்: “ஓலையைக் காட்டுங்கள்!” 

அந்தோ! சுந்தரர் எண்ணம் தவறுகின்றது! சுந்தரரின் மனத்தில் தோன்றும் எண்ணங்களையே அறிந்துள்ளவர் போன்று அவ் வயோதிகர் காண்கின்றார். போற்றுதற்குரிய அம் முதுவர் எவ்வாறேனும் அபகாரம் செய்யவே முனைப்பாகவுள்ளார். சுந்தரர் பொறுத்துக்கொள்ள இயலுமளவு அவரை அலைக்கழிக்கவும் தொல்லைகொடுக்கவும் சீண்டவும் மிரட்டவும் உரப்பவும் விரும்புகின்றார் அவர். மானஸரோவரின் பழைய பழகோட்டி சுந்தரரின் அதட்டலுக்குச் சற்றும் தளராது அவரை இங்ஙனம் ஏசினார்: “இவ்வோலையை வலிந்துகேட்கும் உரிமை எவ்விதம் உனக்கு உண்டு? அதிகப்பிரசங்கியே! நீ எனக்கு அடிமைசெய்வதற்கே உரிமையுடையவன் ஆவாய்!”


சூழவிருந்தோர் அனைவரின் விழிகளும் தம்மீது குவிந்திருந்த சுந்தரர் சீற்றத்தில் தம்வசம் இழந்துவிட்டார். புதிதாக வந்த இவ் அச்சுறுத்தலை இனியும் அவரால் பொறுக்க இயலவில்லை. அதை அவர் தம்முன்னிருந்து விரட்டியடிப்பார். அவகுறியாக விளங்கும் பனையோலையை அழித்துவிட வேண்டும். சுந்தரர் தம் எண்ணத்தைச் செயல்படுத்த அணியமாகும் முன்னரேயே உள்மனம் நுழைபுலம் / உள்மனத்தை ஊடுருவும் வல்லமை படைத்த அந்த மாயாஜாலகாரர் ஓட்டம் பிடிக்கத்தொடங்கினார். வெகுண்டு நின்ற சுந்தரர் அவ் வயோதிகரைப் பிடிக்க ஓடுகின்றார். ஓடுதலும் துரத்துதலும் சிறிது நேரம் தொடர்கின்றன. காலம் நீளும் முன்னமே சுந்தரர் அக்கிழவரைப் பிடித்துவிடுகின்றார். “அந்தணர் அடிமையாகும் இம்முறை எங்கிருந்து வந்தது? என்று கூறிக்கொண்டே அவ்வோலையை அவ்வயோதிகரிடமிருந்து வலிந்து பிடுங்கித் துண்டுதுண்டாக்கக் கிழித்துப்போடுகின்றார்.


தாம் ஒரு மலைப்பாம்பைப் பிடித்துள்ளோம் என்பதை சுந்தரர் சிறிதும் உணரவில்லை. அவ் வயோதிக வம்புக்காரர் எதையும், அனைத்தையும் தமக்குச் சாதகமாகத் திருப்பும் வல்லமை படைத்தவர் ஆவார். வசமான வாய்ப்பேதும் இல்லாமலேயே சுந்தரரைப் புரட்டியெடுக்கக்கூடியவர் அவர்! அவசரப்பட்டுவிட்ட சுந்தரர் அக் கிழட்டுச் சண்டைக்காரருக்கு வசமாக ஒரு பிடியைக் கொடுத்துவிட்டார்! புரோகிதர்களும் மற்ற பெரியோர்களும் சுந்தரரின் அறிவுதவறிய செயலுக்குச் சாட்சிகளாக உள்ளனர். முதியவரின் முறையீடு மேலும் விசையாற்றல் பெற்று பேரோலமாக வளர்கின்றது. “அந்தணர்களே! அறிஞர்களே! வயோதிகன் ஒருவனின் வழக்கு தீர்க்கப்படும் முறை இதுவேயோ? சிச்சீ! அறமுறை என்பது விலங்குகளிடம் சென்றுவிட்டதோ? தம்முன்னேயே அநீதி நிகழ்வதை அறவழி தவறியவரும் சட்டஒழுங்கற்றவருமன்றி யார் பொறுத்திருப்பார்?”  

விரைவிலேயே ஆங்கிருந்த அந்தணர்கள் அவ் வெண்தாடிக்காரரைச் சூழ்ந்துகொள்கின்றனர். அவரோ புத்தூக்கத்துடன் தம் தாக்குதலைத் தொடர்கின்றார். “அறிவிற்சிறந்தோரே! இவ் எதிர்வாதி தன் தோல்வியைத் தானே நிறுவிவிட்டான் என்பதைக் காணுங்கள்! என்னிடமிருந்து அடிமை ஓலையை வலிந்து பிடுங்கிக் கொண்டு அதை அழித்த இவனே என் வழக்குக்கு உயிருள்ள சான்றாவான்!”


தம் கரம் அவசரம் மிக்க ஒரு கணத்தில் அவ் ஆவணத்தைப் பிடுங்கி அழித்துவிட்டதென்று இப்போது சுந்தரர் எண்ணுகின்றார். சூழ்ச்சி இறுகுகின்றதென்றும் அவர் மேலும் நினைக்கின்றார். தம் எதிரி சாதாரணமானவரல்லர் என்று அவர் உறுதியாகக் கருதுகின்றார். அவர் ஒருவாறு குழப்பமுற்றுள்ளார். தம்முடன் மோதுபவர் களம் பல கண்ட வழக்காடி என்னும் உண்மையை அக்குழப்பத்தினிடையேயும் அவர் உணர்ந்துள்ளார். அந்தணர்களை நோக்கி அவர் உரைக்கின்றார்: “காணீர்! இவர் துறைபோன விவகாரி! அழிம்பு செய்வதிலும் அழிவழக்கிடுவதிலும் கைதேர்ந்தவர்! பழைய மன்றாடி போலும்!¹” குரங்குப்பிடியான இப் போராளி திருவெண்ணைநல்லூர்க்காரர் என்று தெரியவந்துள்ளது. வழக்கின் தொடக்க கட்டம் ஆதரவாக அமையவில்லை. வழக்காடும் இடத்தை மாற்றுவது நிலைமையை மேம்படுத்தி அவருடைய இன்னலை மாற்றக்கூடும். சாட்டப்படும் ஆவணம் திருவெண்ணைநல்லூரில் உறுதிமுடிக்கப்பட்டது என்பதால் வழக்குமுதல் தோன்றிய இடம் அவ்வூரே². ஆகவே சுந்தரர் அவ்வூரிலேயே இவ்வழக்கைத் வாதிட முடிவுசெய்கின்றார். மேலும், திருவெண்ணைநல்லூரிலுள்ள நீதிமன்றம் அப்பகுதிக்கான நீதியாட்சி அதிகாரம் கொண்டதுமாகும்.


இப்போதே வெற்றிப்பெருமிதத்துடன் விளங்கும் அம் முதுவர் திருவெண்ணைநல்லூர் நீதிமன்றத்துக்கு வழக்கை இடமாற்றம் செய்ய ஒப்புகின்றார்³. கண்கூடான களிப்புடன் கூறுகின்றார் அவர்: “இவ்வழக்கின் சூழமைவில் பிரதிவாதி ஆவணத்தை அழித்தது அவனுடைய கட்சியை வலுப்படுத்தாது. அவன் கிழித்தது படி ஓலை⁴ மட்டுமே! மூல ஓலை⁵ என்னிடம் பாதுகாப்பாக உள்ளது! அங்கே அந்தணர் மன்றத்தின் முன் அதைக் காட்டி அடிமை ஒப்பந்தத்தைத் தடைக்கிடமின்றி நான் நிரூபிப்பேன்!”


காட்சி திருவெண்ணைநல்லூருக்கு நகர்கின்றது. எளிமை மிகுந்த அந்தணர்களின் மாண்புமிக்க அவை கூடியுள்ளது. வழக்காளி தன் முறைப்பாட்டை⁶ முன்வைக்கின்றார். வழக்கு நடவடிக்கை தொடங்குகின்றது. பழைய மன்றாடியாம் முதுவர் வழக்கைச் சுருக்கமாக நடுவர்கள் முன் வைக்கின்றார்.


நீதிமன்றத்தின் தலைவர் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத்தக்கதா⁷ என்பது பற்றிய பூர்வாங்கமான தடையொன்றை⁸ எழுப்புகின்றார். அந்தணரை அந்தணர் அடிமை கொள்ளல் மரபுக்கு முற்றும் மாறானது, வெறுப்பானது என்கிறார் அவர். 


சட்டஞ்சார்ந்த தாக்குதல் எதற்கும் கலங்காதவர் நம் வழக்காளி. எழுப்பப்பட்ட தடைக்குத் தம் சட்டநுட்பமான ஆனால் நன்குநிற்கக்கூடிய உத்தரத்தால் மறுப்புரை தருகின்றார் அவர். தம் வழக்கு மரபுவழக்கையோ தருமநூல்களையோ அடிப்படையாகக் கொண்டு தொடரப்பட்டதன்று என்றும் மாறாக, சட்டப்படியானதோர் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அது தொடரப்பட்டதுள்ளதென்றும் கூறினார் அவர்.⁹ 

நீதிமன்றம் வழக்காளியின் இவ்வாதத்தை ஏற்றுக்கொள்கின்றது  வழக்கு தொடர்கின்றது. வழக்காளியைப் போன்றே எதிர்வாதியையும் நடுவர்கள் விசாரிக்கின்றனர். சுந்தரர் ஏன் அடிமை ஓலையைக் கிழித்தெறிந்தார் என்று அவர்கள் வினவுகின்றனர். சுந்தரர் அவர்களை நோக்கிக்கூறுகின்றார்: “சட்டவிதிநூல்கள் அனைத்தும் உணர்ந்தீர்! நான் ஆதிசைவன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆகவே அஃது இந்நீதிமன்றம் தன் கவனத்தில் எடுத்துக்கொள்ளக்கூடியதேயாகும்.”¹⁰


எப்படியும், சுந்தரர் விவரமில்லாத வழக்காடி அல்லர். அவரும் சட்டம், சட்டமுறைகள் ஆகியவற்றில் நன்கு தேர்ந்தவராகவே காணப்படுகின்றார். அவர் அந்நாட்டின் அரசனால் வளர்க்கப்பட்டவர் அன்றோ? ஆகவே அவர் நாட்டின் சட்டவியலில் தேவையான பயிற்சிபெற்றவராகவே இருத்தல் வேண்டும்.


சுந்தரர் தொடர்கின்றார்: “இவ்வந்தணன் என்னைத் தனக்கு வேறு அடிமை என்று சொல்வானானால் இது என் மனத்திற் கெட்டாத மாயையாயுள்ளது. எனக்கு இதனை இன்னபடி எனத் தெளிந்து அறிந்து சொல்லக்கூடவில்லை”


சுந்தரர் முன்வைக்கும் வாதத்தின் வலிமையை நீதிமன்றம் நன்கு உணர்ந்துள்ளது. ஆகவே, வழக்கை நிறுவும் பொறுப்பு வழக்காளியிடமே, அதுவும் மிகவும் அழுத்தமாக, உள்ளதென்று அது விதிக்கின்றது: “இவரை உன் அடிமை என்ற வெவ்வுரை எம்முன் ஏற்றவேண்டும்.”¹¹


தன் முன் நிற்கும் வழக்காடிகள் சாதாரண குடிமக்கள் என்றும் சட்டதொழில்முறையாளர்கள் அல்லர் என்றும் எடுத்துக்கொண்டு, நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு முறைதீர்மன்றத்தில் பின்பற்றப்படும் சான்றுவகைகளை நீதிமன்றமே எடுத்துக்கூறுகின்றது. அவையாவன: (1) ஆட்சி¹², அதாவது சான்றோரிடத்துத் தொன்றுதொட்டு வழங்கி வருவதும், அதுகாரணம்பற்றி யாவராலும் ஒப்புக்கொள்ளப் பெறுவதுமான உலக வழக்கு; (2) ஆவணம்¹³, (3) அயலார்தம் காட்சி¹⁴, அதாவது தொடர்பில்லாதவர்களின் நேரிற் கண்ட சான்று. இவ்வாறாக, தொடர்பில்லாதவற்றுடனும் செவிவழிச்செய்திகளுடனும்¹⁵ தன் நேரத்தை வீணடிக்கப்போவதில்லையென்று நீதிமன்றம் குறித்துள்ளது. கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை வழக்கின் இருபக்கத்தினருக்கும் ஐயப்பாட்டுக்கு இடமின்றித் தெரிவிக்கப்படுகின்றது. 


வழக்குநடவடிக்கையைத் தொடங்கும் உரிமை வழக்காளிக்கே உண்டு¹⁶. ஆகவே அவர் தம் வழக்கைத் தொடக்குகின்றார். நீதிமன்றத்தின் நேரம் மதிப்புமிக்கதென்று அவர் அறிந்துள்ளார். எனவே அவர் பலசொல்லக் காமுறாமல், பயனில சொல்லாமல் தம் வழக்கை சுருக்கமாகவும் இறுக்கமாகவும் முடிக்கும்பொருட்டு நேரே விஷயத்துக்குள் புகுகின்றார்: “சற்றும் பொருத்தமற்ற சீற்றத்துடன் எதிர்வாதி கிழித்த ஓலை படி ஓலை மட்டுமே! மதிப்புக்குரிய நீதிமன்றத்தினரின் முன் காட்டுவதற்காக மூல ஓலையை நான் பாதுகாப்பாக வைத்துள்ளேன்.” இவ்வாறாக, வழக்காளி நீதிமன்றத்தின் முன் மூல ஓலையைச் சான்றாக வைக்கச் சித்தமாமாக உள்ளார். அது நேரடிச்சான்று அடிப்படைச் சான்று என்பதோடு ஆவணச்சான்றாகவும் விளங்கும்.


ஓர் உறையினுள் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ள ஓலை கரணத்தானிடம்¹⁷ (நீதிமன்றத்தின் எழுத்தாயன்) கையளிக்கப்படுகின்றது. அவன் அதைத் தொழுது வாங்கிக்கொள்கின்றான். அவன் சுருண்டுள்ள ஓலையை விரித்து நீட்டிப் பரிசோதித்ததும் அதன் நோன்மை நோக்கி அது மிகப் பழையதோர் ஆவணம் என்று கண்டுகொள்கின்றான். அதன் பின் அவர் அதை உரக்கப் படிக்கின்றான்: “நாவலூரைச் சேர்ந்த ஆதிசைவன் ஆரூரனாகிய நான் பெருமுனியாகிய வெண்ணெய்நல்லூர்ப் பித்தனுக்கு இதன் மூலம் இவ் ஆவணத்தில் எழுதுதிதருவதாவது:.யானும் என்பால் வருமுறை மரபுளோளரும் வழித்தொண்டு செய்தற்கு நான் எழுதும் இவ் ஓலையை (முழுச் சம்மதத்துடன் மனம் செயல் என்னும்) இருமையால் நேர்ந்தேன். இதற்கு இவை என் எழுத்தே.” 

ஓலையைப் படித்த பின்னர் அதன் சாட்சியாளர்களின் மேல் எழுத்துகள்¹⁹ (சாட்சிக் கையொப்பங்கள்) பரிசோதிக்கப்பட்டு மெய்யென்று காணப்படுகின்றன. பிறகு ஆவணம் எதிர்வாதியிடம் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு, அதன் மெய்ம்மையை உறுதிகாணவும் நீதிமன்றத்துக்கு அதைத் தெரிவிக்கவும் எதிர்வாதிக்கு ஒரு வாய்ப்பளிக்கப்டுகின்றது.


இவ் வழக்கின் வாதியோ எதிர்வாதிக்கு எச்சலுகையையும் அனுமதிக்காதவராவார். ஆகவே, மெய்ம்மை அறுதியீடு இதயம் செய்ய எதிர்வாதி முற்றும் தகுதியற்றவர் என்று நீதிமன்றத்திடம் அவர் வற்புறுத்தினார். வழக்கு ஓலையில் காணும் எழுத்தையும் கையொப்பத்தையும் ஆவணம்செய்தவரின் நிரூபணமாகிய கையெழுத்துடனும் கையொப்பத்துடனும் நீதிமன்றம் ஒப்பிடலாம் என்று அவர் யோசனை முன்வைக்கின்றார்²⁰. வழக்காளி உச்ச விடாப்பிடியாக உள்ளார் ஆயினும் நீதிமன்றத்தின் உள்ளார்ந்த ஆணையுரிமைகளுக்குத் தம்மை உட்படுத்திக்கொள்ள அவர் முழுமனத்துடன் முன்வருகின்றார் என்பதைக் கருத்திற் கொள்வதே நியாயமாக இருக்கும். நீதிமன்றத்தின் நீதியாட்சி உரிமையையோ ஆணையுரிமையையோ எவரும் வளைத்துவிடக்கூடாதென்பதுதான் அவருடைய ஒரே கவலையாகும். ஆகவே அவர் மொழிகின்றார்: “வேறு எழுது கைச்சாத்து உண்டாகில் இவ் ஆவணத்தோடும் எழுத்து நீர் ஒப்புநோக்கி வந்து அது மொழிமின்.*”²¹


*மூலத்தில் “வந்தது மொழிமின்” என்றுள்ளது. இதை “ஒப்புநோக்கி அதன் பின் உங்கள் மனத்தில் சரியென்று வந்ததைக் கூறுங்கள்” என்றும் பொருளுரைக்கலாம். தமிழின் நீர்மை!



அவ்வாறே, எதிர்வாதியின் சிறு ஐயத்தையும் நீக்கும்பொருட்டு ஆவணக் காப்பகத்திலிருந்து அவர்தம் பாட்டனாரின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கையெழுத்தையும் கையொப்பத்தையும் கொண்ட ஆவணங்கள் தருவிக்கப்பட்டு ஒப்பீடு நிகழ்கின்றது. கையெழுத்துகளும் கையொப்பங்களும் முற்றும் ஒத்திருந்தன. வழக்காளியின் வழக்கு ஐயத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது. பிரதிவாதியின் எதிர்வாதம் தோல்வியுற்றுவிட்டது. 


நீதிமன்றம் அப்போதே தீர்ப்புவழங்குகின்றது. அதன்படி, எதிர்வாதி சதாகாலமும் வழக்காளிக்கு அடிமைசெய்யக் கடன்பட்டுள்ளார் என்று நீதிமன்றம் ஆணையிட்டுத் தீர்ப்புக்கூறுகின்றது. இவ்வாறு நிறைவுபெறுகின்றது புகழ்பெற்ற அவ் வழக்கு. வழக்கு தொடரப்பட்ட அன்றே அது அவசரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, பொருத்தமான நீதியாட்சி உரிமையுள்ள நீதிமன்றத்துக்கு உடனடியாக மாற்றப்பட்டு, சட்டமுறைப்படி விசாரணை செய்யப்பட்டு முடித்துவைக்கப்பட்டது என்பது மிகவும் மகிழ்ச்சியூட்டுவதாகும். வில்லியம் ஷேக்ஸ்பியர் (William Shakespeare) அத்துணை குறைகூறிய “சட்டத்தின் காலந்தாழ்த்துதல்” (the law’s delay)²² இங்கே அறவே இல்லை என்பது குறித்து நோக்கற்குரியது. 

 


¹இங்கிலாந்தின் நீதியாட்சிச் சட்டம் (திருத்தம்), 1959, பிரிவு 1 (i)இன் கீழ்  (Judicature (Amendment) Act, 1959, Sec. 1 (i) நீதிமன்றம் அழிவழக்கிடும் வழக்காளி ஒருவர் வழக்குதொடர்வதைத் தடைசெய்வது மட்டுமல்லால் ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளையும் அவர் அழிவழக்காளி என்று அறிவிக்கப்பட்ட பின்னர் தொடர்ந்து நடத்தாதபடி தடைசெய்யலாம்.

²உரிமையியல் விசாரணைமுறைச் சட்டம், பிரிவு 20 (c)  (Civil Procedure Code)

³மேற்படி, பிரிவு 24

⁴இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு 63 (Indian Evidence Act)

⁵மேற்படி, பிரிவு 62

⁶உரிமையியல் விசாரணைமுறைச் சட்டம், பிரிவு 7, விதி 10 (2) 

⁷மேற்படி, பிரிவு 7, விதி (1)

⁸AIR 1935 All. 310 & AIR 1953 T.C. 286 at 291

⁹ “முதலாவதாக, பதினெட்டாம் நூற்றாண்டின் அரசியல் தத்துவத்தில் மனித சுதந்திரத்தின் மீது மிகுந்த அழுத்தம் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தம்முடைய தனிநலன்களைத் தம் வழியிலேயே மேற்கொள்ளும் சுதந்திரத்துடன் இருக்கவேண்டுமென்று கூறப்பட்டது. ஆகவே, ஒரு ஒப்பந்தத்தில் அதன் கட்சியினர் புலப்படுத்தியுள்ளபடி அவர்களின் உத்தேசங்களைச் செயல்படுத்துவதே சட்டத்தின் கடமையாகுமென்று கொள்ளப்பட்டது. “உடன்படிக்கைச் சுதந்திரத்தின்” மீது எத்துணை அளவு இயலுமோ அத்துணையளவு குறைந்தபட்ச கட்டுப்பாடுகளையே விதிக்கவேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது. இதே கருத்தையே அ-டம் ஸ்மித்தும் (Adam Smith) பறைசாற்றினார். ━அ-ன்ஸன் உடன்படிக்கைச் சட்டம், 23-ஆம் பதிப்பு, 1971, முன்னுரை, பக்கம் 2 & 3 (Anson’s Law of Contracts, 23rd Edition, 1971, Introduction, pp. 2 & 3

ஷைலக்குக்கு எதிராக போர்ஷியா வழங்கிய தீர்ப்பு சட்டத்துக்கு மட்டுமல்லாது செய்லடுத்தக்கூடிய ஓர் உடன்படிக்கையின்வாசகங்களுக்கும் எதிரானதாகும். வழக்கு விசாரணைக் காட்சியில் சட்டத்தின் நிலை, வெனிஸ் வணிகன், புதிய உரைவளப் பதிப்பு, ஹாரிஸ் ஃபர்னஸ், பக்கம் 403 - 420 (The Law in the Trial Scene, The Merchant of Venice, a New Variorum Edition by Horace Furness, Dover Publications Inc., New York.)

¹⁰இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு 56

¹¹மேற்படி, பிரிவு 101 

¹²மேற்படி, பிரிவு 14

¹³ஒரு வழக்கு எதைத் தீர்மானிக்கின்றதோ அதற்கு மட்டுமே அது பிரமாணமாகும். பிரமாணங்கள் அல்லது முடிவுகூறப்பட்ட வழக்குகளின் ஒரே பயன் ஏதேனுமொரு பொதுவிதியை நிறுவதேயாகும். நீதிபதி அப்பொதுவிதியைத் தம்முன் உள்ள வழக்கை முடிவுசெய்வதற்குப் பின்பற்றலாம்.” ━ஸர் ஜார்ஜ் ஜெஸ்ஸல் (Per Sir George Jessel, M.R.; Re Hallett (1884). 13 Ch. D 712

¹⁴செல்லத்தக்க ஒரு மரபு சட்டத்தின் ஆற்றல் படைத்தது. அரசுக்குச் சட்டம் என்னவோ அஃதே சமுதாயத்துக்கு மரபு. (ஸ-ல்மண்ட் [Salmond])

¹⁵இந்திய சாட்சியச் சட்டம், இயல் 5

¹⁶மேற்படி, இயல் 4

¹⁷மேற்படி, இயல் 2

¹⁸உரிமையியல் விசாரணைமுறைச் சட்டம்,,Or 18, R. 1

¹⁹நீதிமன்றத்தின் நடுவர் எழுத்தர் போன்றவர் (Bench Clerk of a Court)

²⁰இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு 90

²¹மேற்படி, பிரிவு 68

²²மேற்படி, பிரிவு 45 

²³ ஹா-ம்லெட், அங்கம் 3, காட்சி 1, வில்லியம் ஷேக்ஸ்பியர் (Hamlet, Act 3, Scene 1)



Comments

Popular posts from this blog

A Piece From Shakespeare's Macbeth. ஸேக்ஷ்பியரின் ம-க்பெத் நாடகத்திலிருந்து ஒரு கீற்று.

திறம் மாறிய சொற்கள்

Comparitive Literature: Kannadasan, Kamban and Shakespeare