தமிழ்ச்சொற்களுக்குப் புதிய ஆங்கில இணைச்சொற்கள் - சில கருத்துகள்

 

தமிழ்ச்சொற்களுக்குப் புதிய  ஆங்கில இணைச்சொற்கள் 


Bouncer என்னும் ஆங்கிலச்சொல்லுக்குத் தமிழ் வளர்ச்சிக் கழகம் “மெய்க்காவலர்” என்று தமிழ்ச்சொல்     தந்துள்ளது. இச் சொல் ஆங்கிலத்தில் a person who is employed at a bar, nightclub, etc., to eject disorderly persons என்னும்                             பொருளுடையது. தமிழ் விக்சனரி இதற்கு சிக்கல் [உண்டாக்குபவர்களைக்] கட்டுப்படுத்த ஒரு                                                                                     நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட ஊழியர்” என்று பொருள்படுத்துகின்றது. எனவே இவர்களின்     காவல்தொழில் முதற்கண் நிறுவனத்துக்கேயன்றி வாடிக்கையாளருக்கன்று என்பது ஒருதலை.     மற்ற வாடிக்கையாளருக்கு இதனாற் பயனடையக்கூடுமென்பது புல்லுக்கும் ஆங்கே பொசிவதேயாகும்.     தமிழ்ப்பேரகராதி “மெய்காவலன்” என்பதற்கு Body-guard; பிறனுக்கு ஆபத்துநேராமற் காப்பவன்” என்று பொருளுரைக்கின்றது. எனவே இச்சொல் ஏற்கனவே இப்பயன்பாட்டில் வழங்கிவரும்போது இப்போது கொள்ளப்படும் புதிய பொருள் பொருத்தமானதா என்று எண்ணத் தோன்றுகின்றது. “கலகர் அகற்றுவோர்” என்பதைக் கருதலாமா?

அவ்வாறே “smart meter” என்பது “திறன்மானி” என்று தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது. “மானி” என்பது

“மான” (அளக்கும்) என்னும் சம்ஸ்கிருத மூலத்தை உடையது. இன்றியமையாத போது சமஸ்கிருதத்தின்

உதவியை எடுத்துக்கொள்வது நடைமுறைக்கொப்பதேயாகும். ஆனால் “திறன்” அல்லது “திறம்” முதற்கண் “வலிமை” என்னும் பொருளுடைத்து. தற்காலத்தில் “திறமை” என்னும் பொருளிலும் பரக்கப் பயன்கொள்ளப்படுவது. இங்கு அது “Ability, cleverness, dexterity; சாமர்த்தியம்” என்னும் பொருளாகக் கொள்ளப்பட்டு “smart” என்பதற்கு இணையாகத் தரப்பட்டுள்ளது.

எல்லாக் கருவிகளுமே தத்தம் அளவில் திறனுள்ளவைதாம் என்பதால் சிறப்பாக “smart” என்று

சுட்டுவதற்கு “சிறப்புத்திறன், தனித்திறன், உயர்திறன்” என்பன போன்று கருதலாமோ?  “Smart city”

“திறன்வள நகர்” என்று தரப்பட்டுள்ளதால் “smart meter” என்பதையும் “திறன்வளமானி” எனலாமோ?

“நகர்” “நகர” என்னும் சம்ஸ்கிருத மூலமுடைத்தென்பது நோக்கற்குரியது.


“Guaranty” என்பதற்குப் “பொறுப்புறுதி” என்று தரப்பட்டுள்ளது. இது சென்ற நூற்றாண்டிலேயே 

சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதி ஏற்கனவே தந்த சொல்தான்.  

“Warranty” என்பதற்குக் “காப்புறுதி” என்னும் சொல் தரப்பட்டுள்ளது. இச்சொல் “Insurance” என்பதற்கும் தமிழ்ச்சொல்லாக நிலவி வருவது. “காப்பீடு” என்ற சொல்லும் “insurance” என்பதையே குறித்து வருகின்றது. “Warranty” என்பது ஒரு பொருள் அல்லது சேவையின் குறைபாட்டுக்கு ஈடு செய்ய உறுதிகூறுவது. எனவே “warranty” என்பதற்கு “ஈட்டுறுதி” என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம் என்று தோன்றுகின்றது.

Comments

Popular posts from this blog

A Piece From Shakespeare's Macbeth. ஸேக்ஷ்பியரின் ம-க்பெத் நாடகத்திலிருந்து ஒரு கீற்று.

திறம் மாறிய சொற்கள்

Comparitive Literature: Kannadasan, Kamban and Shakespeare